பேராசிரியை நிர்மலாதேவி மீதான வழக்கு வேறு கோர்ட்டுக்கு மாற்றம்
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி மீதான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட முதன்மை கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் அந்த கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகிய 3 பேரும் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் மீதான வழக்கு விசாரணை விருதுநகர் 2–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. 3 பேருக்கும் கடந்த 17–ந் தேதி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் 1,360 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. பேராசிரியை நிர்மலாதேவி உள்பட 3 பேரும் நேற்று மீண்டும் விருதுநகர் 2–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது மாஜிஸ்திரேட்டு திலகேஸ்வரி, பேராசிரியை நிர்மலாதேவி உள்ளிட்ட 3 பேரிடமும் குற்றப்பத்திரிகை நகல்களை பெற்றுக்கொண்டீர்களா? என கேட்டார். 3 பேரும் பெற்றுக்கொண்டதாக தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட முதன்மை கோர்ட்டுக்கு மாற்றப்படுவதாக தெரிவித்த மாஜிஸ்திரேட்டு திலகேஸ்வரி, வருகிற 24–ந் தேதி இவர்கள் 3 பேரையும் மாவட்ட முதன்மை கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார்.
பேராசிரியை நிர்மலாதேவி கடந்த 17–ந் தேதி விருதுநகர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது தனக்கு மதுரை மத்திய சிறையில் பிற கைதிகளால் அச்சுறுத்தல் இருப்பதால் தன்னை வேறு சிறைக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். நேற்று இந்த கோரிக்கையை மனுவாக கொடுத்தார். மாஜிஸ்திரேட்டு மனுவை பெற்றுக்கொண்டு, இதுகுறித்து பரிசீலிப்பதாக கூறினார்.
இதையடுத்து பேராசிரியை நிர்மலாதேவி உள்ளிட்ட 3 பேரும் மீண்டும் மதுரை மத்திய சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்.