பேராசிரியை நிர்மலாதேவி வேலை பார்த்த கல்லூரியில் பெண் ஊழியர்கள் 4 பேர் மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல்


பேராசிரியை நிர்மலாதேவி வேலை பார்த்த கல்லூரியில் பெண் ஊழியர்கள் 4 பேர் மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 20 Sept 2018 5:30 AM IST (Updated: 20 Sept 2018 12:50 AM IST)
t-max-icont-min-icon

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக எழுந்த புகாரில் கைதான பேராசிரியை நிர்மலாதேவி பணியாற்றிய தனியார் கல்லூரியில் தற்காலிகமாக பணியாற்றும் ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி கல்லூரி மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அருப்புக்கோட்டை,

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக எழுந்த புகாரில் கைதான பேராசிரியை நிர்மலாதேவி பணியாற்றிய தனியார் கல்லூரியில் தற்காலிகமாக பணியாற்றும் ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி கல்லூரி மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் திருச்சுழி சாலையில் தேவாங்கர் கலைக்கல்லூரி உள்ளது. இங்கு பணியாற்றிய பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் வகையில் செல்போனில் பேசியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த கல்லூரியில் 30–க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இவர்களை பணிநிரந்தரம் செய்வதில் பாரபட்சம் காட்டப்படுவதாக புகார் எழுந்தது.

கல்லூரி நிர்வாகம் கடந்த 13 ஆண்டுகளாக பணி புரியும் தங்களை விட்டுவிட்டு கடந்த ஆண்டு தற்காலிக பணியில் சேர்ந்த 3 பேரை பணியில் சேர்த்துள்ளனர் என குற்றம் சாட்டினர். அதனை கண்டித்தும், பணி நிரந்தரம் கோரியும் கல்லூரி தற்காலிக ஊழியர்களான தனலட்சுமி, மகாதேவி, கலைச்செல்வி, சுகஸ்தலா ஆகிய 4 பேரும் கல்லூரி வளாகத்தில் கடந்த 2 நாட்களாக தர்ணா போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் 4 பெண் ஊழியர்களும் நேற்று காலை திடீரென கல்லூரியின் 3–வது மாடிக்கு சென்றனர். அவர்கள் அங்கிருந்து கீழே குதிக்கப்போவதாக கூறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் கல்லூரியில் பரபரப்பு ஏற்பட்டது. அருப்புக்கோட்டை போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போராட்டம் நடத்திய தனலட்சுமி உள்பட 4 பேரிடமும் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்டநேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் 4 ஊழியர்களும் கீழே இறங்கினர்.

இதற்கிடையில் கல்லூரி மாணவ–மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் இறங்கினர். கல்லூரியில் அடிக்கடி நடக்கும் பிரச்சினைகளால் கல்வி பாதிக்கப்படுவதாக கூறியும், இதில் அரசு தலையிட்டு ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் என்று கோரியும் அவர்கள் கல்லூரி அலுவலக அறை முன்பு அமர்ந்து கோ‌ஷமிட்டனர். பிரச்சினை தீவிரம் அடைந்த நிலையில் கல்லூரி பேராசிரியர்களும் நிர்வாகத்தை கண்டித்து கல்லூரி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.


Next Story