அண்ணாமலை பல்கலைக்கழக விடுதியில் மாணவர் திடீர் சாவு
சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக விடுதியில் நேற்று மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிதம்பரம்,
சென்னை குறுக்குப்பேட்டையை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் சத்தியா (வயது 21). இவர் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. ஆங்கிலம் 4-ம் ஆண்டு படித்து வந்தார். பல்கலைக்கழக வளாக பகுதியில் அமைந்து இருக்கும் மல்லிகை விடுதியில் தங்கியிருந்து சத்தியா படித்து வந்தார்.
நேற்று காலை 7 மணிக்கு அவர் விடுதியில் இருந்த போது, திடீரென சத்தியாவுக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. உடன் அங்கிருந்த சக மாணவர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக ராஜாமுத்தையா மருத்துவகல்லூரி மருத்தவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சத்தியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த அண்ணாமலை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, சத்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை முடிவு வெளியான பின்னரே அவர் எப்படி இறந்தார், சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து தெரியவரும் என்று போலீசார் தரப்பில் தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செயது விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story