தாராபுரத்தில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட விவகாரம்: கைதானவர் புகைப்படத்திற்கு பதிலாக வேறு ஒருவரின் படம் நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் பா.ஜனதா கட்சியினர் புகார்


தாராபுரத்தில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட விவகாரம்: கைதானவர் புகைப்படத்திற்கு பதிலாக வேறு ஒருவரின் படம் நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் பா.ஜனதா கட்சியினர் புகார்
x
தினத்தந்தி 20 Sept 2018 4:15 AM IST (Updated: 20 Sept 2018 3:59 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரத்தில் பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் கைதானவரின் புகைப்படத்திற்கு பதிலாக வேறு ஒருவரின் புகைப்படம் இடம் பெற்று இருப்பதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜனதா கட்சியினர் போலீசில் புகார் செய்தனர்.

தாராபுரம்,

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டது. இது தொடர்பாக தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தளவாய்பட்டிணம் அருகே உள்ள சிக்கனாபுரம் கணபதிதோட்டத்தை சேர்ந்த தொழில் அதிபர் கந்தசாமியின் மகனான எம்.பி.ஏ. பட்டதாரி நவீன்குமாரை (வயது 28) போலீசார் கைது செய்தனர். இவர் கைது செய்யப்பட்ட விவரம் புகைப்படத்துடன் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

ஆனால் சமூக வலைத்தளங்களில் தொழில் அதிபர் கந்தசாமியின் மகனான நவீன்குமார் புகைப்படத்திற்கு பதிலாக தாராபுரம் உப்புத்துறைபாளையத்தை சேர்ந்த ஜீவானந்தம் என்பவரின் மகனும், பா.ஜனதாவின் தாராபுரம் நகர இளைஞர் அணி பொதுச்செயலாளருமான ஜீ.நவீன்குமாரின் புகைப்படம் இடம் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அந்த புகைப்படத்தின் கீழ் ‘‘இவர்தான் பெரியார் சிலையை அவமதிப்பு செய்தவர்’’ என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது. இதனால் ஜீ.நவீன்குமார் அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து பா.ஜனதா கட்சியின் நகர செயலாளர் ராஜா மற்றும் பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் தாராபுரம் போலீசில் புகார் செய்தனர். அந்த புகாரில் ‘‘ஒரு அமைப்பின் பெயரில் உள்ள முகநூல் மற்றும் வாட்ஸ்–அப்பில் உப்புத்துறைபாளையத்தை சேர்ந்த ஜீ.நவீன்குமார் என்பவரின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து, இவர் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்தவர், தாராபுரம் நகர இளைஞர் அணியில் உள்ளார். இவர்தான் பெரியார் சிலையை அவமதிப்பு செய்தவர் என்று பதிவிடப்பட்டுள்ளது.

இந்த தவறான தகவலை வெளியிட்டவர்களை கண்டு பிடித்து அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. ஜீ.நவீன்குமார் தாராபுரம் தாலுகா அலுவலகம் ரோட்டில் உணவகம் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story