வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு


வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 20 Sept 2018 4:18 AM IST (Updated: 20 Sept 2018 4:18 AM IST)
t-max-icont-min-icon

காட்பாடியில் வியாபாரியின் வீட்டின் பூட்டை உடைத்து 10½ பவுன் நகையை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

காட்பாடி, 


காட்பாடி சோலைநகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 60). இவர், காட்பாடி போலீஸ் நிலையம் எதிரே எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். சங்கர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் 17-ந்தேதி பெங்களூருவில் உள்ள உறவினர் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்க வீட்டை பூட்டி விட்டுச் சென்று விட்டார்.

நிகழ்ச்சி முடிந்து நேற்று காலை சங்கர் மற்றும் குடும்பத்தினர் வீட்டுக்குத் திரும்பினர். வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அங்கு, ஆங்காங்கே பொருட்கள், துணிகள் சிதறி கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் வைத்திருந்த 10½ பவுன் நகையை காணவில்லை. யாரோ திருடிச் சென்று விட்டனர்.

இதுகுறித்து சங்கர் காட்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு, சங்கர் மற்றும் அவரின் வீட்டின் அருகே வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வியாபாரியின் வீட்டில் நகையை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். 

Next Story