அம்பத்தூர் ஏரிக்கரையில் இருந்த ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றம், பொதுமக்கள் எதிர்ப்பு


அம்பத்தூர் ஏரிக்கரையில் இருந்த ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றம், பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 19 Sep 2018 11:02 PM GMT (Updated: 19 Sep 2018 11:02 PM GMT)

அம்பத்தூர் ஏரிக்கரையை ஆக்கிரமித்து கட்டி இருந்த வீடு, கடைகளின் ஒரு பகுதியை பொக்லைன் எந்திரம் மூலம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடித்து அகற்றினர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அம்பத்தூர்,

சென்னையில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களில் அகற்றவேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து சென்னை முழுவதும் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி சென்னை அம்பத்தூர் அருகே அயப்பாக்கம் பகுதியில் உள்ள அம்பத்தூர் ஏரிக்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அங்கு சென்றனர்.

அம்பத்தூர் ஏரிக்கரையை ஒட்டி 1986–ம் ஆண்டு முதல் ஏராளமானவர்கள் வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர். இதில் 160 வீடுகளின் பின்பகுதி, ஏரிக்கரையை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டு உள்ளதாக கூறி, அவற்றை பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இதற்கு அங்கு குடியிருந்து வரும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தாங்கள் மாநகராட்சிக்கு உரிய சொத்து வரி செலுத்தி உள்ளதாகவும், பட்டாவுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் கூறினர்.

ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள், சென்னை ஐகோர்ட்டு உத்தரவுபடியே ஆக்கிரமிப்பு பகுதிகள் இடித்து அகற்றப்படுவதாக கூறினர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த அம்பத்தூர் போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்தனர்.

இதையடுத்து ஏரிக்கரையை ஆக்கிரமித்து கட்டி இருந்த வீடுகள் மற்றும் கடைகளின் ஒரு பகுதியை மட்டும் அதிகாரிகள் இடித்து அகற்றினர்.


Next Story