காசிமேட்டில் ‘கியாஸ் பங்க்’ திறக்க எதிர்ப்பு: பொதுமக்கள் முற்றுகை போராட்டம் போலீசாருடன் வாக்குவாதம்


காசிமேட்டில் ‘கியாஸ் பங்க்’ திறக்க எதிர்ப்பு: பொதுமக்கள் முற்றுகை போராட்டம் போலீசாருடன் வாக்குவாதம்
x
தினத்தந்தி 20 Sept 2018 4:45 AM IST (Updated: 20 Sept 2018 4:43 AM IST)
t-max-icont-min-icon

காசிமேட்டில் ‘கியாஸ் பங்க்’ திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

திருவொற்றியூர்,

சென்னை காசிமேடு ஜீவரத்தினம் சாலையில் ஆட்டோவுக்கு கியாஸ் நிரப்பும் பங்க் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் தொடங்கியபோதே அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை ‘கியாஸ் பங்க்’ திறக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் அப்பகுதி பெண்கள் உள்பட 200–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் கியாஸ் பங்கை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த காசிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஆரோக்கியராஜ், சிதம்பரம் முருகேசன் மற்றும் போலீசார் அவர்களை கலைந்துபோகும்படி கூறினர். இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாமல் அங்கேயே திரண்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் போலீசார் அவர்களை சமரசம் செய்து கலைந்து போக செய்தனர்.


Next Story