புதுவை மாநில அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்திற்கு வரவேண்டும் - புகழேந்தி அழைப்பு
புதுவை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்திற்கு திரும்ப வரவேண்டும் கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்றக்கழக செயலாளர் புகழேந்தி அழைப்பு விடுத்தார்
புதுச்சேரி,
புதுச்சேரி மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. புதுவை சுதேசி மில் அருகே நடந்த இந்த கூட்டத்திற்கு கட்சியின் மாநில செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் பாஸ்கர், அம்மா பேரவை செயலாளர் மூர்த்தி, துணைத்தலைவர் பாண்டுரங்கன், இணை செயலாளர்கள் ஆறுமுகம், உமா மோகன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக பொருளாளர் ரங்கசாமி எம்.எல்.ஏ., கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, தமிழக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வாசுதேவன், கணபதி, அருள், தலைமை கழக பேச்சாளர் ஈசாக் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
கூட்டத்தில் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி பேசியதாவது:–
புதுவை மாநிலத்தில் அண்ணா பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். தமிழகமும், புதுவையும் ஜெயலலிதாவுக்கு இரு கண்ணாகும். புதுவை மாநில மக்களுக்கு ஜெயலலிதா அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிறைவேற்றுவார்.
மத்திய அரசு புதுவை அரசை ஏமாற்றி வருகிறது. புதுவையில் கவர்னர் கிரண்பெடி மூலமாக முதல்–அமைச்சர் நாராயணசாமிக்கு பல்வேறு தொந்தரவுகளை கொடுத்து வருகிறது. புதுவைக்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்க மறுத்து வருகிறது.
புதுவையில் உள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், அசனா ஆகியோர் முதலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்தனர். இதற்கிடையே அவர்கள் அணி மாறிவிட்டனர். அவர்கள் புதுவையில் மீண்டும் எம்.எல்.ஏ.க்களாக வரவேண்டுமென்றால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு திரும்ப வர வேண்டும்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் தமிழகம், புதுவையில் ஆட்சி மலரும்.
இவ்வாறு அவர் பேசினார்.