சம்பளம் வழங்கக்கோரி கதர்வாரிய ஊழியர்கள் முற்றுகை போராட்டம்
சம்பளம் வழங்கக்கோரி கதர்வாரிய ஊழியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி,
புதுவை கதர் வாரியத்தில் சுமார் 150 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் சம்பளம் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக ஊழியர்கள் கதர் வாரிய தலைமை செயல் அதிகாரியான ஜான்சனிடம் முறையிட்டனர். சம்பளம் வழங்கக்கோரி அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட முடிவு செய்தனர்.
இந்தநிலையில் ஊழியர்களுக்கு மெமோ கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சம்பளம் வழங்கக்கோரி கதர் வாரிய ஊழியர்கள் நேற்று தலைமை செயல் அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே அதிகாரி ஜான்சன் சில கோப்புகளை எடுத்துக்கொண்டு அலுவலகத்தில் இருந்து வெளியேறி சென்றார். அதே நேரத்தில் ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
அதன்பின் அவர்களை தொழிலாளர் துறை இயக்குனர் பிரியதர்ஷினி பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். அப்போது ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கோப்புகள் தயார் நிலையில் இருப்பதாகவும், விரைவில் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.