காதலியை பிரித்ததால் கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை முயற்சி


காதலியை பிரித்ததால் கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 21 Sept 2018 3:00 AM IST (Updated: 20 Sept 2018 11:07 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் அருகே காதலியை பிரித்ததால் கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கொடைக்கானல்,

கொடைக்கானல் அருகே பெரும்பாறை பகுதியை சேர்ந்த முருகன் மகன் வினோத் (வயது 19). கூலித்தொழிலாளி. இவருடைய பெற்றோர் இறந்துவிட்டதால் அவருடைய மாமா பராமரிப்பில் இருந்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 1½ ஆண்டுகளாக அவர்கள் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவியை, வினோத் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இதற்காக மாணவியை கொடைக்கானல் அருகே கோம்பை அறத்துறையில் உள்ள தனது மாமா செல்லப்பாண்டி வீட்டுக்கு வினோத் அழைத்து வந்தார்.

இதற்கிடையே மகளை காணாத அவருடைய தந்தை பல்வேறு இடங்களில் தேடியுள்ளார். இருப்பினும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் தனது மகளை, வினோத் அழைத்து சென்ற விவரம் அவருக்கு தெரியவந்துள்ளது. உடனே அவர், தனது உறவினர்களுடன் அறத்துறைக்கு சென்றுள்ளார்.

பின்னர் அங்கிருந்து மகளை அழைத்து சென்றதாக தெரிகிறது. தனது காதலியை பிரித்து அழைத்து சென்றதால் மனம் உடைந்த வினோத், வீட்டில் இருந்த அரிவாள்மனையால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் ரத்தம் பீறிட்டு வெளியேறியது. இதையறிந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல்சிகிச்சைக்காக அவர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து கொடைக்கானல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story