அடுக்குமாடி கட்டிடம் திறக்கப்படாமல் கிடக்கும் அவலம்: இருசக்கர வாகனநிறுத்துமிடமாக மாறிவரும் புதிய பஸ் நிலையம்


அடுக்குமாடி கட்டிடம் திறக்கப்படாமல் கிடக்கும் அவலம்: இருசக்கர வாகனநிறுத்துமிடமாக மாறிவரும் புதிய பஸ் நிலையம்
x
தினத்தந்தி 20 Sep 2018 10:45 PM GMT (Updated: 20 Sep 2018 5:44 PM GMT)

தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பஸ் நிலையம் இருசக்கர வாகன நிறுத்துமிடமாக மாறி உள்ளது. இதனால் பயணிகள் சிரமம் அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை புதிய பஸ் நிலையம் 1995-ம் ஆண்டு கட்டப்பட்டது. தஞ்சையில் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற போது தஞ்சை மேம்பாலம், ராஜராஜன் மணிமண்டபம், தொல்காப்பியர் சதுக்கம், நுழைவு வாயில்கள் ஆகியவற்றுடன் தஞ்சை புதிய பஸ் நிலையமும் கட்டப்பட்டது. இதனால் புறநகர் பஸ்கள் அனைத்தும் இங்கிருந்து தான் சென்று வருகின்றன.

இந்த பஸ் நிலையத்தில் இருந்து வேளாங்கண்ணி, புதுச்சேரி, கேரளா, வேலூர், செங்கோட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், திருச்சி, சென்னை, மதுரை, நாகை, சீர்காழி, திருவாரூர், கும்பகோணம், வேதாரண்யம் உள்ளிட்ட இடங்களுக்கு பஸ்கள் சென்று வருகின்றன. இதனால் இந்த பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

இதில் மதுரை, வேளாங்கண்ணி பஸ்கள் நிற்கும் மார்க்கத்தில் பயணிகளுக்காக நீண்ட நிழலகம், மற்றும் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதே போல் கும்பகோணம் பஸ்கள் நிற்கும் மார்க்கத்திலும் நீண்ட பயணிகள் நிழலகம், இருக்கைகள் போடப்பட்டுள்ளன.

இதில் கும்பகோணம் பஸ்கள் நிற்கும் மார்க்கத்தில் உள்ள பயணிகள் நிழலகம் தற்போது இருசக்கர வாகன நிறுத்துமிடமாக மாறி வருகிறது. இந்த பகுதியில் தினமும் சுமார் 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிகளுக்கு இடையூறாக வரிசையாக நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்வது இல்லை.

பயணிகள் நிழலகத்துக்குள் செல்ல முடியாத அளவிற்கு வழி நெடுகிலும் இவ்வாறு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் இருக்கைகளுக்கு கூட செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். சாதாரண நாட்களில் இப்படி என்றால் மழைகாலங்களில் பயணிகள் இன்னும் சிரமப்பட வேண்டிய நிலை உள்ளது.

தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் வாகன நிறுத்துமிடம் உள்ளது. மேலும் தற்போது புதிதாக ரூ.50 லட்சம் செலவில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் கட்டியும் திறக்கப்படாமல் உள்ளது. அது சமூக விரோதிகளின் கூடாரமாகவும், மது அருந்தும் இடமாகவும் காட்சி அளிக்கிறது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “புதிய பஸ் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடத்தை விரைவில் இருந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். மேலும் பயணிகளுக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே பஸ் நிலைய வளாகத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக ஏராளமான பழக்கடைகள் உள்ளன. இந்த நிலையில் இது போன்று வாகனங்களும் நிறுத்துவதால் பயணிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்றனர்.

Next Story