மாவட்ட கல்வி அலுவலர் முன்னிலையில் சக ஆசிரியர்களிடம் தலைமை ஆசிரியை மன்னிப்பு கேட்டார்


மாவட்ட கல்வி அலுவலர் முன்னிலையில் சக ஆசிரியர்களிடம் தலைமை ஆசிரியை மன்னிப்பு கேட்டார்
x
தினத்தந்தி 20 Sep 2018 10:15 PM GMT (Updated: 20 Sep 2018 7:18 PM GMT)

மாவட்ட கல்வி அலுவலர் முன்னிலையில் சக ஆசிரியர்களிடம் தலைமை ஆசிரியை மன்னிப்பு கேட்டார் வகுப்பறைக்கு செல்லாமல் போராடியதால் பரபரப்பை ஏற்படுத்தியது.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி பெண் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஜீவா. இவருக்கும், இப்பள்ளியில் பணியாற்றும் சக ஆசிரியர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை இருந்து வருகிறது. ஏற்கனவே, மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) முனி சுப்புராயன், தலைமை ஆசிரியருக்கு அறிவுரை வழங்கி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியருக்கும், சக ஆசிரியர்களுக்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. வழக்கம்போல், ஆசிரியர்களை தலைமை ஆசிரியர் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் சக ஆசிரியர்கள் வகுப்பறைக்கு செல்லாமல் வெளியே வராண்டாவில் அமர்ந்தனர்.

மதிய வருகை பதிவேட்டில் கையெழுத்திடாமல் மீண்டும் வராண்டாவிலேயே உட்கார்ந்தனர். தகவல் கிடைத்ததும் மாவட்ட கல்வி அலுவலர் முனி சுப்பராயன் மற்றும் இரு அதிகாரிகள் அப்பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கடைசியில் அவரவர்களின் மனக்குறைகளை தனித்தனியாக எழுதி மாவட்ட அலுவலரிடம் கொடுத்தனர். இதையடுத்து அதிகாரிகள் முன்னிலையில் தலைமை ஆசிரியர், சக ஆசிரியர்களிடம் மன்னிப்பு கேட்ட பிறகு பிரச்சினை சுமுகமாக முடிந்தது.

Next Story