வியாபாரியை கொலை செய்த அண்ணன்-தம்பிக்கு ஆயுள் தண்டனை


வியாபாரியை கொலை செய்த அண்ணன்-தம்பிக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 20 Sep 2018 9:30 PM GMT (Updated: 20 Sep 2018 8:20 PM GMT)

கோவை அருகே பழைய இரும்பு வியாபாரியை கொலை செய்த அண்ணன்-தம்பிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

கோவை, 


நெல்லை மாவட்டம் ராதாபுரம் சீலாத்திக்குளத்தை சேர்ந்தவர் வன்னியராஜ் (வயது 34). அதே பகுதியை சேர்ந்தவர்கள் தங்கமணி (37). அவரது தம்பி ராமச்சந்திரன் (35). இவர்கள் 3 பேரும் கோவையை அடுத்த க.க.சாவடி அருகே உள்ள மாவுத்தம்பதியில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்து பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தனர்.அவர்கள் 3 பேருக்கும் திருமணம் ஆகியிருந்தபோதிலும் குடும்பத்தினர் சொந்த ஊரிலேயே வசித்து வந்தனர். வியாபாரிகள் 3 பேரும் அடிக்கடி சொந்த ஊருக்கு சென்று வருவது வழக்கம். அப்படி சென்று வரும்போது வன்னியராஜுக்கும் தங்கமணியின் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தங்கமணிக்கு தெரியவந்தது. இது தொடர்பாக அவர் வன்னியராஜுவை கண்டித்துள்ளார்.

இதுதொடர்பாக கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் 5-ந் தேதி க.க.சாவடியில் 3 பேரும் தங்கியிருந்த வீட்டில் வாக்குவாதம் ஏற்பட் டது. இதில் ஆத்திரம் அடைந்த அண்ணன்- தம்பி இரண்டு பேரும் சேர்ந்து வன்னியராஜுவின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்தனர். கொலையை மறைப்பதற்காக வன்னியராஜுவின் உடலை தூக்கில் தொங்கவிட்டுச் சென்று விட்டனர்.

இந்த கொலை தொடர்பாக க.க.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கமணி, ராமச்சந்திரன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை 4-வது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட அண்ணன்-தம்பி 2 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஸ்ரீதேவி தீர்ப்புக் கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் வக்கீல் விஜயகுமார் ஆஜரானார். 

Next Story