கொமந்தான்மேட்டில் ரூ.4 கோடியில் தடுப்பணை கட்டும் பணி


கொமந்தான்மேட்டில் ரூ.4 கோடியில் தடுப்பணை கட்டும் பணி
x
தினத்தந்தி 20 Sep 2018 10:45 PM GMT (Updated: 20 Sep 2018 8:54 PM GMT)

பாகூர் அருகே கொமந்தான்மேட்டில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே ரூ.4 கோடி செலவில் தடுப்பணையுடன் கூடிய பாலம் கட்டும் பணியை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கிவைத்தார்.

பாகூர், 


பாகூர் அருகே கொமந்தான்மேட்டில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணையுடன் கூடிய பாலம் உள்ளது. இதன் வழியாக கடலூர், பாகூர் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் பயன்பெற்று வந்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தடுப்பணை மற்றும் பாலம் உடைந்து சேதமடைந்தது. இதனால் தண்ணீர் தேக்கி வைக்க முடியாமல் கடலில் வீணாக சென்று கலந்தது. பாலம் சேதமடைந்த பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கி, தற்காலிகமாக பயன்படுத்தப்பட்டது. இதை சீரமைக்கக்கோரி விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதுபற்றி ‘தினத்தந்தி’யிலும் படத்துடன் செய்தி பிரசுரிக்கப்பட்டது.

இந்த நிலையில் பாகூர், குருவிநத்தம், சோரியாங்குப்பம் உள்ளிட்ட கிராம விவசாயிகள் பயன்பெறும் வகையில் நீராதாரத்தை பெருக்கவும், தண்ணீர் வீணாக கடலுக்கு செல்வதை தடுக்கவும் கொமந்தான்மேட்டில் ரூ.4 கோடியே 11 லட்சம் செலவில் 40 மீட்டர் நீளமும், 1.50 மீட்டர் உயரமும் கொண்ட தடுப்பணையுடன் கூடிய பாலத்தை புதிதாக கட்ட முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் தடுப்பணை கட்டுமானப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. தனவேலு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பணிகளை முதல்-அமைச்சர் நாராயணசாமி பூஜை செய்து தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அரசு செயலாளர் தேவேஷ் சிங், தலைமை பொறியாளர் சண்முகசுந்தரம், கண்காணிப்பு பொறியாளர் சத்தியமூர்த்தி, உதவி பொறியாளர் தாமரை புகழேந்தி, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்தரராஜன், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் அசோக் ஷிண்டே உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story