விருத்தாசலம் பகுதிகளில் காரில் சென்று சாராயம் விற்ற 2 பேர் கைது
விருத்தாசலம் பகுதி கிராமங்களுக்கு காரில் சென்று சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம்,
கடலூர் மாவட்டம் விருத்தாசலம், வேப்பூர், சிறுபாக்கம் பகுதியில் ஒரு கும்பல் தினமும் கிராமங்களுக்கு காரில் சென்று சாராயம் விற்பனை செய்து வருவதாக விருத்தாசலம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று காலையில் சிறுபாக்கம் பகுதியில் சாதாரண உடையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, எஸ்.நரையூர் கிராமத்தில் ஒரு கார் வேகமாக வந்து நின்றதும், அதில் இருந்து 3 பேர் கொண்ட கும்பல் இறங்கியது. உடனே அங்கிருந்த குடிபிரியர்கள், ஓடிவந்து பணம் கொடுத்து சாராயத்தை வாங்கிச்சென்றனர். உடனே போலீசார், அந்த கும்பலை சுற்றிவளைத்தனர். இதில் அந்த கும்பலை சேர்ந்த ஒரு வாலிபர் மட்டும், தப்பி ஓடிவிட்டார். மற்ற 2 பேரையும் போலீசார் பிடித்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், சேலம் மாவட்டம் கவற்பனையை சேர்ந்த பெரியசாமி மகன் சோழமுத்து(வயது 28), சித்தேரி கிராமத்தை சேர்ந்த நடேசன் மகன் பாண்டியன்(38) ஆகியோர் என்பதும், திண்டிவனத்தில் இருந்து சாராயத்தை கடத்தி வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 கேன்களில் இருந்த 150 லிட்டர் சாராயம், கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் தப்பி ஓடிய வடபாதியை சேர்ந்த ராயப்பிள்ளை மகன் சரத்குமார்(28), என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story