கல்லூரிக்கு வராத மாணவர்களின் விவரங்கள் பெற்றோருக்கு தெரிவிக்க ஏற்பாடு


கல்லூரிக்கு வராத மாணவர்களின் விவரங்கள் பெற்றோருக்கு தெரிவிக்க ஏற்பாடு
x
தினத்தந்தி 20 Sep 2018 10:00 PM GMT (Updated: 20 Sep 2018 9:04 PM GMT)

மாணவர்கள் கல்லூரிக்கு வராதது குறித்த விவரங்கள் எஸ்.எம்.எஸ். மூலம் பெற்றோருக்கு தெரிவிக்கப்படும் என்று அமைச்சர் கமலக்கண்ணன் கூறினார். புதுவை அமைச்சர் கமலக்கண்ணன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுச்சேரி, 


புதுவையில் சொசைட்டிகளின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அரசு மானியம் மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது. அதன்படி தவளக்குப்பம் ராஜீவ்காந்தி கல்லூரி, வில்லியனூர் கஸ்தூரிபாய் கல்லூரி, இந்திராகாந்தி கலைக்கல்லூரி, பெருந்தலைவர் காமராஜர் கலைக்கல்லூரி மற்றும் பிப்மேட்டின் கீழ் இயங்கும் பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்களுக்கும் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த காலங்களில் முதல்-அமைச்சர் ஒப்புதலின்பேரில் அந்த கல்லூரிகளுக்கு மானியம் வழங்கப்பட்டது. ஆனால் இப்போது கவர்னர் நிதி ஒதுக்கும் அதிகாரம் தனக்கே இருப்பதாகவும் தன்னிடம் ஒப்புதல் பெறவேண்டும் என்றும் கூறியுள்ளார். அவரது அறிவுறுத்தல் காரணமாக கோப்புகள் அவருக்கு முதல் முறையாக அனுப்பப்பட்டது. இதனால் சம்பளம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.

இப்போது சம்பளம் வழங்க கவர்னரிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. வரும் காலங்களில் இதற்கான கோப்புகளை முன்கூட்டியே அனுப்பி குறிப்பட்ட நேரத்தில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நிர்வாக ரீதியில் மாற்றங்கள் வரும்போது அரசு ஊழியர்கள் அதை புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் சற்று பொறுமை கொள்ள வேண்டும். கல்லூரி ஆசிரியர்களின் போராட்டம் என்பது மாணவர்களை பாதிக்கும். இப்போது ரூ.57 கோடியே 8 லட்சத்துக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் 809 பேர் சம்பளம் பெறுவார்கள்.

இவ்வாறு அமைச்சர் கமலக்கண்ணன் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது:-

கடைமடை பகுதியான காரைக்காலுக்கு இப்போது காவிரி நீர் வருகிறது. விரைவில் விவசாய பணிகள் தொடங்கிவிடும். கடந்த ஆண்டு 6 ஆயிரம் ஹெக்டேர் பயிரிடப்பட்டது. காரைக்கால் பட்டமேற்படிப்பு மையமும் கருணாநிதி பெயரில் இந்த மாதமே தொடங்கப்படும். அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி வளாகத்தில் இந்த மையம் செயல்படும்.

உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அனைத்தும் இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் பெறப்பட்டன. அதில் சில பெற்றோர்களுக்கு சிரமம் இருந்தது. இன்னும் இடம் கிடைக்காதவர்களுக்கு விரைவில் ஒட்டுமொத்த கலந்தாய்வு நடத்தி இடங்கள் வழங்கப்படும். அதற்கு தேவையான இடங்கள் நம்மிடம் உள்ளன. நமது மாநில மாணவர்களை சேர்த்தபின்பு காலியிடம் இருந்தால் பக்கத்து மாநில மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கல்லூரி மாணவர்கள் வகுப்பினை புறக்கணிப்பதை தடுக்கும் விதமாக அவர்கள் வருகை குறித்த விவரங்கள் எஸ்.எம்.எஸ். மூலம் பெற்றேருக்கு தெரிவிக்கப்படும். அதேபோல் மாணவர்களுக்கு காப்பாளர்களாக ஆசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர். அவர்கள் மாணவர்களின் நிலை குறித்து பெற்றோரிடம் ஆலோசிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கமலக்கண்ணன் கூறினார். 

Next Story