கேளிக்கை கப்பல் அறிமுகப்படுத்தப்படும் அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் அறிவிப்பு


கேளிக்கை கப்பல் அறிமுகப்படுத்தப்படும் அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் அறிவிப்பு
x
தினத்தந்தி 20 Sep 2018 9:45 PM GMT (Updated: 2018-09-21T02:41:49+05:30)

சூதாட்டம், மது விருந்து, மனமகிழ் மன்றம் ஆகியவை இடம்பெறக் கூடிய கேளிக்கை கப்பல் புதுவையில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தெரிவித்தார்.

புதுச்சேரி, 

புதுவை அரசின் சுற்றுலாத்துறை சார்பில் புதுச்சேரி சுற்றுலாவில் உள்ள சவால்களும், வாய்ப்புகளும் என்னும் தலைப்பிலான கருத்தரங்கு தனியார் ஓட்டலில் நடந்தது. இதை சுற்றுலாத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த ஆட்சியில் சுற்றுலா துறை வளர்ச்சிக்காக எதையும் செய்யவில்லை. தற்போது சுற்றுலா திட்டங்கள் எவ்வளவு வேகமாக நடைபெறுகிறது என்பது உங்களுக்குத் தெரியும். புதுவையில் மத்திய அரசின் நிதி உதவியுடன் இப்போது ரூ.183 கோடியில் 32 வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன. சுற்றுலாத்துறைக்கு மத்திய அரசிடம் இருந்து அதிக நிதி பெற்ற மாநிலம் புதுச்சேரி தான்.

புதுச்சேரிக்கு அடுத்து மற்றொரு யூனியன் பிரதேசம் ரூ.42 கோடிதான் நிதியை பெற்றுள்ளது. மத்திய அரசின் செயலர்கள், இணை செயலர்கள் உதவினாலும் புதுவைக்கு மானியம் பெறுவதில் சிரமம் உள்ளது. இம்மாத இறுதிக்குள் ரூ.23 கோடி செலவு செய்வதற்கான பயன்பாட்டுச்சான்றிதழ் வழங்கினால் மத்திய அரசிடம் இன்னும் 2 மாதங்களில் மேலும் ரூ.300 கோடியை வளர்ச்சிப் பணிகளுக்கு கேட்டுப் பெற முடியும்.

புதுவையில் புராதான சுற்றுலா, ஆன்மிக சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. மது மற்றும் பெட்ரோல் டீசல் விற்பனை மூலம் புதுச்சேரிக்கு 35 சதவீத வருமானம் கிடைக்கிறது. பெட்ரோல், டீசலை சரக்கு மற்றும் சேவை வரிக்குள் கொண்டுவந்தால் வருமானம் இல்லாத நிலை ஏற்படும். எனவே வருமானத்தை பெருக்க சில திட்டங்களை கொண்டு வர வேண்டியுள்ளது.
புதுவையில் அரசியல் நிலவரம் சரியாக இல்லை. எனவே வேகமாக செயல்பட முடியவில்லை. நாம் வேகமாக செயல்பட நினைத்தாலும் சிலர் தடை போடுகின்றனர். இது குறித்து விரிவாக பேச தேவையில்லை. உங்களுக்கே தெரியும். ஏதாவது ஒரு திட்டத்தை கொண்டு வந்தால் இதை செய்யக்கூடாது, அதை செய்யக்கூடாது என்று கூறுகின்றனர்.

புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் காலையில் வந்து மாலையில் திரும்பும் சூழ்நிலை தான் உள்ளது. அவர்கள் 2, 3 நாட்கள் புதுவையில் தங்கிச் செல்லும் வகையில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் கப்பல் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அடுத்த வாரம் இறுதிச்சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

கோவாவில் இருப்பதுபோல கேளிக்கைகளுடன் கூடிய கப்பல் அதாவது சூதாட்டம், மதுவிருந்துடன் கூடிய மனமகிழ் மன்றம் (கேசினோ) திட்டமும் புதுவையில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். நீர் சாகச விளையாட்டுகளை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளோம். இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் இருந்தால்தான் புதுச்சேரிக்கு சுற்றுலா வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

புதுச்சேரி விமானநிலைய விரிவாக்கம் தொடர்பாக இன்னும் ஒரு வாரத்துக்குள் தமிழக, புதுச்சேரி தலைமைச் செயலாளர்கள் பேச உள்ளனர். புதுச்சேரி விமானநிலைய விரிவாக்கத்துக்கு தேவையான நிலத்தை தமிழக பகுதியில் நில ஆர்ஜிதம் செய்ய புதுவை அரசு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளோம்.
புதுச்சேரியில் இருந்து ஐதராபாத், பெங்களூரு செல்லும் விமான சேவை வெற்றி அடைந்துள்ளது. அதுபோல் திருப்பதி, கொச்சி உள்பட பல்வேறு இடங்களுக்கு விமான சேவை தொடங்க வேண்டும் என்று மத்திய மந்திரியிடம் வலியுறுத்தி உள்ளோம். அவர்களும் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். விரைவில் விமான சேவை தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா வளர்ச்சி கழகத் தலைவர் எம்.என்.ஆர்.பாலன் எம்.எல்.ஏ., சுற்றுலாத்துறை செயலாளர் பார்த்திபன், இயக்குனர் முகமது மன்சூர், இந்திய சுற்றுலா சங்கத் தலைவர் ஸ்டீவ் பார்கியா மற்றும் புதுச்சேரியில் உள்ள ஓட்டல் தொழில் முனைவோர் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இதன் நிறைவு விழா நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சியில் அமெரிக்கா சுற்றுலாத்துறை நிபுணரும், சர்வதேச நிலையான சுற்றுலா அமைப்பு சுற்றுலாதள நிகழ்ச்சி இயக்குனருமான கேத்லீன் பெரிலோனா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் மிகுந்த இடங்களுக்கு 30 சதவீத சுற்றுலா பயணிகள் செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். சமூக மற்றும் கலாசாரம் சார்ந்த சுற்றுலாத்தலங்களை பார்வையிட படித்தவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். சர்வதேச அளவில் பன்னாட்டு நிறுவனங்களில் ஆண்டுக்கு 10 மில்லியன் டாலர் தொகை சுற்றுலாவுக்காக ஒதுக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் அமெரிக்க தூதரக கலாசார பிரிவு அதிகாரி மவுலிக் பெர்க்கானா, அமெரிக்க தூதரக மக்கள் தொடர்பு அதிகாரி இளையபெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story