மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.2¾ லட்சம் திருட்டு
அரிசி ஆலை அதிபரின் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.2¾ லட்சத்தை மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்றனர்.
அரக்கோணம்,
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை சேர்ந்தவர் தெய்வசிகாமணி (வயது 46), அரிசி ஆலை அதிபர். இவர், அரக்கோணம் - சோளிங்கர் சாலையில் உள்ள ஒரு வங்கியில் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்தை எடுத்து கொண்டு வங்கியை விட்டு வெளியே வந்தார். பின்னர் அவர், பணத்தை மோட்டார் சைக்கிளின் பக்கவாட்டில் உள்ள பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு திருத்தணி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.
வடமாம்பாக்கம் மேம்பாலம் அருகே உள்ள டீக்கடை அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தெய்வசிகாமணி டீ குடிக்க சென்றார். டீ குடித்துவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளில் பெட்டி திறந்து கிடந்தது. பெட்டியில் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தெய்வசிகாமணி அரக்கோணம் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம், இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story