ரூ.2¼ லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்


ரூ.2¼ லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 21 Sept 2018 3:15 AM IST (Updated: 21 Sept 2018 3:43 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் ரூ.2¼ லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

ஈரோடு, 


ஈரோடு மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும், தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது தெரியவந்தால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்றும் மாவட்ட கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டு உள்ளார். அதன்பேரில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் ஈரோடு வீரப்பன்சத்திரம் கொத்துக்காரன்தோட்டம் பகுதியில் உள்ள ஒரு விசைத்தறி கூடத்தில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி கலைவாணி தலைமையில் அதிகாரிகள் நேற்று அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினார்கள்.

அங்குள்ள ஒரு குடோனில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் சுமார் ரூ.2¼ லட்சம் மதிப்பிலான 220 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. பின்னர் அனைத்து புகையிலை பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதிகாரிகள் நடத்திய விசாரணையில், புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது அங்குள்ள ஒரு விசைத்தறிக்கூடம் என்பதும், வீரப்பன்சத்திரம் 16 ரோடு பகுதியில் உள்ள ஒரு மளிகைக்கடையில் விற்பனை செய்வதற்காக புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறும்போது, “புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தாலோ, விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் 2 நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் தற்போது ஒரு மளிகைக்கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டது”, என்றனர். 

Next Story