பெரும்பள்ளம் ஓடை தூர்வாரும் பணி கலெக்டர் கதிரவன் தொடங்கி வைத்தார்


பெரும்பள்ளம் ஓடை தூர்வாரும் பணி கலெக்டர் கதிரவன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 20 Sep 2018 9:45 PM GMT (Updated: 20 Sep 2018 10:15 PM GMT)

ஈரோடை அமைப்பு சார்பில் பெரும்பள்ளம் ஓடை தூர்வாரும் பணியை கலெக்டர் கதிரவன் தொடங்கி வைத்தார்.

ஈரோடு, 


ஈரோடு மாநகரின் முக்கிய ஓடையாக இருப்பவை பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் ஓடை, சுண்ணாம்பு ஓடை, செங்கோடம் பள்ளம் ஓடை ஆகியன. இதில் பெரும்பள்ளம் மற்றும் பிச்சைக்காரன் பள்ளம் ஆகிய 2 ஓடைகளே ஈரோடு என்ற பெயர் உருவாக காரணம் என்று அறிஞர்களால் கூறப்படுகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற பெரும்பள்ளம் மற்றும் பிச்சைக்காரன் பள்ளம் ஓடைகள் சாக்கடையாக மாறி ஈரோடு மாநகரின் கழிவு ஓடையாக உள்ளன.

ஈரோடு மாநகரில் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை செய்து வரும் ஒளிரும் ஈரோடு, ஈரோடை, சிறகுகள் போன்ற அமைப்புகள் நீர்நிலைகளை சுத்தம் செய்வதிலும் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. அதன்படி ஈரோடை அமைப்பு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பள்ளம் ஓடை மற்றும் பிச்சைக்காரன் பள்ளம் ஓடைகளை சுத்தப்படுத்தும் பணியை கையில் எடுத்தது. அப்போது பெரும்பள்ளம் ஓடைக்காக மட்டும் சுமார் ரூ.50 லட்சம் செலவிடப்பட்டது. சுமார் 7 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த பெரும்பள்ளம் ஓடையை தூர்வாரி சுத்தம் செய்ததால் அப்போது பெய்த ஒரு பெரும் மழையின்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அசோகபுரி, மரப்பாலம் பகுதி குடிசைப்பகுதிகள் பாதிப்பு ஏற்படாமல் தப்பின என்பது குறிப்பிடத்தக்கது. ஓடை சுத்தம் செய்யப்பட்ட பின்னர், ஓடையை தொடர்ந்து தூய்மையாக பராமரிக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் துண்டுபிரசுரங்களை ஈரோடை அமைப்பினர் வழங்கினார்கள். மேலும், புறநகர் பகுதிகளில் இருந்தும் பலர் ஓடையில் குப்பைகள், கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவதை தடுக்க ஸ்டோனிபாலம், காந்திஜி ரோடு பாலம் பகுதிகளில் பிரமாண்ட அளவிலான கம்பி வேலிகளையும் ஈரோடை அமைப்பு சார்பில் வைக்கப்பட்டது.

கடந்த 3 ஆண்டுகளில் பெரும்பள்ளம் ஓடையில் குப்பையும், புதர்களும் அதிகரிக்கத்தொடங்கி உள்ளன. விரைவில் பருவமழைக்காலம் தொடங்கிவிடும் என்பதால் பெரும்பள்ளம் ஓடையை சுத்தம் செய்யும் பணியை மீண்டும் ஈரோடை அமைப்பு கையில் எடுத்து உள்ளது. இதற்கான தொடக்க விழா நேற்று சூரம்பட்டிவலசு அணைக்கட்டு பகுதியில் நடந்தது.

விழாவுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கி தூர்வாரும் பணிகளை தொடங்கி வைத்தார். ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சீனிஅஜ்மல்கான் முன்னிலை வகித்தார். ஒளிரும் ஈரோடு அமைப்பு தலைவர் அக்னி எம்.சின்னசாமி, துணைத்தலைவர் சி.டி.வெங்கடேஸ்வரன், சமூக ஆர்வலர்கள் பாலசுப்பிரணியம், ஜெ.ஜெ.பாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஈரோடை அமைப்பு நிறுவனரும், சுதா பல்துறை மருத்துவமனை நிர்வாக இயக்குனருமான டாக்டர் கே.சுதாகர் செய்து இருந்தார்.

இதுகுறித்து டாக்டர் கே.சுதாகர் கூறியதாவது:-

ஈரோடு மாநகருக்கே பெருமை சேர்க்கும் வகையில் பெரும்பள்ளம், பிச்சைக்காரன் பள்ளம் ஓடைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதை ஈரோடை அமைப்பு இலக்காக கொண்டு உள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பள்ளம் ஓடையை தூர்வாருவதை ஒரு சவாலாக தொடங்கினோம். அப்போது ஓடையில் இருந்து சுமார் 10 ஆயிரம் டன் குப்பை, கழிவுகள் ஓடையில் இருந்து தூர்வாரப்பட்டு அகற்றப்பட்டது. கரையும் பலப்படுத்தப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. ஆனால் பெரும்பள்ளம் ஓடையை மையப்படுத்தியே பெரும்பாலான சாக்கடை கால்வாய்கள் அமைக்கப்பட்டு இருப்பதால் மீண்டும் ஓடையில் சாக்கடை சேருவதை தடுக்க முடியவில்லை. இருப்பினும் ஓடையை சுத்தம் செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து மீண்டும் அந்த பணியை கையில் எடுத்து இருக்கிறோம். இந்த முயற்சிக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன், ஆணையாளர் சீனி அஜ்மல்கான் ஆகியோர் ஒப்புதல் அளித்து ஊக்கப்படுத்தி பணியை தொடங்கியும் வைத்து உள்ளனர்.

உடனடியாக தூர்வாரும் பணியை தொடங்கி விட்டோம். அணைக்கட்டு பகுதி, பெரியார் நகர் பகுதி, மரப்பாலம் பகுதி என 3 இடங்களில் பொக்லைன் எந்திரங்கள் ஒரே நேரத்தில் குப்பை மற்றும் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு உள்ளன. சுமார் 1000 டன் கழிவுகள் அகற்றப்படும். இதற்காக ஈரோடை அமைப்பு சுமார் ரூ.15 லட்சம் செலவிட இலக்கு வைத்து இருக்கிறது.

இவ்வாறு ஈரோடை அமைப்பின் நிறுவனர் டாக்டர் கே.சுதாகர் கூறினார். 

Next Story