தடுப்பணை கட்டும் பணிக்காக ஆற்றில் மணல் திருட்டு


தடுப்பணை கட்டும் பணிக்காக ஆற்றில் மணல் திருட்டு
x
தினத்தந்தி 21 Sept 2018 3:15 AM IST (Updated: 21 Sept 2018 3:50 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே பாலாற்றில் தடுப்பணை கட்டும் பணிக்காக மணல் திருடிய வாகனங்களை பொதுமக்கள் சிறை பிடித்ததனர்.

திருப்பத்தூர், 


திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கருந்தமலையில் உற்பத்தியாகும் பாலாறு, அங்கிருந்து சிங்கம்புணரி வழியாக திருப்பத்தூர் பெரிய கண்மாய் வரை பாய்கிறது. கடந்த 2005-ம் ஆண்டுக்கு பின்னர் இந்த ஆற்றில் நீர்வரத்து சொல்லும்படியாக இல்லை. இதற்கிடையில் திருப்பத்தூர் அருகே மணக்குடி மற்றும் மாங்குடிக்கு இடைப்பட்ட பாலாற்றுப் பகுதியில் ரூ.2½ கோடி மதிப்பீட்டில் பொதுப்பணித்துறையினரால் தடுப்பணை கட்டும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த பணிக்காக மணல் வெளியே வாங்காமல், ஆற்றின் கரைப்பகுதியில் அனுமதியின்றி 10 அடி வரை ஆற்றினுள் தோண்டி மணல் திருடி, அதனை கொண்டு கட்டுமான பணிகளை செய்து வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் மணல் திருட்டை கண்ட மணக்குடி மற்றும் மாங்குடி கிராம மக்கள் இப்பகுதியில் மணல் எடுத்தால், மழைக்காலங்களில் தண்ணீர் ஊருக்குள் வரவாய்ப்புள்ளது. எனவே மணல் அள்ளக் கூடாது என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் அதை பொருட்படுத்தாத அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் தொடர்ந்து அதே பகுதியில் மணல் திருடி கட்டுமான பணிகளை மேற்கொண்டனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் மணல் திருடுவதை கண்ட கிராம மக்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் மணல் திருடிய வாகனங்களை சிறை பிடித்தனர். பின்னர் இதுகுறித்து கண்டவராயன்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வருவதை அறிந்த மணல் திருடர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் மணல் திருட பயன்படுத்திய டிப்பர் லாரி மற்றும் ஜே.சி.பி. எந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவற்றின் உரிமையாளர் நாகரத்தினம், டிரைவர் பெரியசாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்த மணல் திருட்டு குறித்து கண்டவராயன்பட்டி போலீசார், கனிமவள துறையினர் நடவடிக்கை எடுக்கக்கோரி தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த மணல் திருட்டுக்கு அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனரா என விசாரிக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

Next Story