கண்மாய், ஊருணி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்


கண்மாய், ஊருணி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
x
தினத்தந்தி 20 Sep 2018 9:45 PM GMT (Updated: 20 Sep 2018 10:24 PM GMT)

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் அதற்கு முன்னதாக கண்மாய், ஊருணி மற்றும் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை, 


வடகிழக்கு பருவமழையின்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள், முன்னேற்பாடு குறித்து மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம், சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். பின்னர் கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதனையொட்டி தாலுகா அலுவலகங்களில் இயங்கும் மழைமானிகள் சரியான நிலையில் இயங்குகின்றனவா என்பது குறித்து தாசில்தார்கள் ஆய்வு செய்து மழை அளவினை தினசரி தவறாது மாவட்ட கலெக்டருக்கு அனுப்ப வேண்டும். வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் தங்களது ஆளுகைக்குட்பட்ட பகுதியில் உள்ள நீர்நிலைகளின் கரைகள் பலமாக உள்ளனவா, உடைப்புகள் ஏதும் உள்ளனவா என்பதை கள ஆய்வு செய்து கரைகளில் பலப்படுத்த வேண்டிய இடங்கள், உடைப்புகள் அடைக்கப்பட வேண்டிய இடங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பட்டியலிட்டு பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை மூலம் உடனடியாக செப்பனிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், மழைநீர் வரும் வரத்துக்கால்வாயின் சேதாரங்களை கண்டறிந்து அதை சீர்செய்து கிராம அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர்கள், உள்ளாட்சி அமைப்புகள் அதை ஆய்வு செய்து உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். பருவமழை காலத்தில் குடிநீரை குளோரினேசன் செய்து சுத்தமான முறையில் பொதுமக்களுக்கு வினியோகிக்க வேண்டும். குளங்கள், ஊருணி மற்றும் கண்மாய்கள் அறிக்கையின் பட்டியலை வருவாய் அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பேரிடர் மேலாண்மைத்துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும். மேலும், வருவாய் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் கண்மாய், ஊருணி மற்றும் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஒப்பந்ததாரர்கள் மூலம் ஏலம் விடப்பட்டு அகற்ற வேண்டும். வரத்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றும் போது ஏதேனும் இடையூறு இருந்தால் காவல் துறையினர் மூலம் தகவல் தெரிவித்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த பணிகளை தனிக்கவனம் எடுத்து ஈடுபாட்டுடன் திறன்பட செய்யும் அலுவலர்களுக்கு பாராட்டுகளும், விருதுகளும் வழங்கப்படும்.

மாவட்டத்தில் வைகையாற்று படுகையில் தாழ்வான பகுதியில் உள்ளவர்களை இயற்கை பேரிடர் மற்றும் மழை வெள்ளம் ஏற்படும் சமயத்தில் தங்க வைத்து, நிவாரணங்கள் வழங்க நல்ல நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்கள், சமுதாய கூடங்கள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றை கண்டறிந்து நிவாரண மையங்கள் அமைக்க வருவாய்த்துறை அலுவலர்கள், வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் கிராம சபை கூட்டங்களில் பேரிடர் தடுப்பு தொடர்பான நடவடிக்கைகளை பொதுமக்களுக்கு தெரிவித்து, அதற்குரிய விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பணி மேற்கொள்ள வேண்டும். பொது சுகாதார துறையினர் மருந்துகள் மற்றும் தொற்று நோய் தடுப்பு ஊசிகளை போதுமான அளவு கையிருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். வடகிழக்குப் பருவமழையின் போது மக்களுக்கு பொது வினியோக திட்டத்தின்கீழ் தங்குதடையின்றி அத்தியாவசிய உணவு பொருள் வழங்கும் பொருட்டு உணவுப் பொருள் துறையினர் போதுமான அத்தியாவசிய பொருட்களை இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story