காங்கிரஸ் தலைவர்களுடன் பிரகாஷ் அம்பேத்கர் சந்திப்பு
மராட்டிய காங்கிரஸ் தலைவர்களுடன் பிரகாஷ் அம்பேத்கர் சந்தித்து தேர்தல் கூட்டணி குறித்து பேசினார். அப்போது குழப்பம் நீடித்ததால் முடிவு எட்டப்படவில்லை.
மும்பை,
அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் நாடாளுமன்ற மற்றும் மராட்டிய சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மராட்டியத்தில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிடுகின்றன. அக்கட்சிகள் பா.ஜனதா, சிவசேனாவுக்கு எதிராக மெகா கூட்டணியை அமைக்கும் முயற்சியில் சிறிய கட்சிகளுடன் பேசி வருகின்றன.ஏற்கனவே விவசாய தலைவரான ராஜூ ஷெட்டி எம்.பி., லோக்தந்திரிக் ஜனதாதளம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் நடத்தி வரும் பரிபா பகுஜன் மகாசங் கட்சியையும் கூட்டணியில் இணைக்க காங்கிரஸ் விரும்புகிறது. ஆனால் பிரகாஷ் அம்பேத்கர் முஸ்லிம் மஜ்லீஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பதாக கடந்த வாரம் அறிவித்து இருந்தார்.இந்த நிலையில் திடீர் திருப்பமாக நேற்று சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் (காங்கிரஸ்) வீட்டுக்கு பிரகாஷ் அம்பேத்கர் வந்தார். அங்கு ராதாகிருஷ்ண விகே பாட்டீல் மற்றும் முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்ராவ் தாக்கரே ஆகியோருடன் பிரகாஷ் அம்பேத்கர் தேர்தல் கூட்டணி குறித்து பேசினார்.
அப்போது முஸ்லிம் மஜ்லீஸ் கட்சியையும் கூட்டணியில் சேர்த்து கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்களிடம் பிரகாஷ் அம்பேத்கர் வலியுறுத்தினார். ஆனால் அந்த கட்சியை கூட்டணியில் சேர்க்க இயலாது என்று பிரகாஷ் அம்பேத்கரிடம் காங்கிரஸ் கூறியதாக தெரிகிறது.அதேநேரத்தில் காங்கிரசுடன் கூட்டணி வைக்க தயார், ஆனால் தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி வைக்க முடியாது என்று பிரகாஷ் அம்பேத்கர் புதிய நிபந்தனை விதித்தார்.
இதனால் கூட்டணி பேச்சுவார்த்தையில் தெளிவான முடிவு எட்டப்படவில்லை.
முஸ்லிம் மஜ்லீஸ் கட்சி மதவாத கொள்கையுடன் செயல்படுவதால், அக்கட்சியுடன் கூட்டணி வைத்தால் அது பா.ஜனதாவுக்கு சாதகமாகி விடும் என்று காங்கிரஸ் கருதுகிறது. இதனால் பிரகாஷ் அம்பேத்கரின் கருத்து பற்றி கட்சி மேலிட தலைவர்களுடன் கலந்து ஆலோசிக்க இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரகாஷ் அம்பேத்கர் கூறுகையில், “சரத்பவார் மதசார்பற்ற கொள்கை கொண்டவர். ஆனால் அவரது கட்சி மதசார்பற்ற கொள்கை கொண்டது அல்ல. எனவே அக்கட்சியுடன் தேர்தல் கூட்டணிக்கு மறுத்தோம்” என்றார்.