காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் மும்பை செல்ல திட்டம்
காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் மும்பை செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், அவர்கள் கவர்னரை சந்தித்து கடிதம் கொடுக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கூட்டணி ஆட்சிக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்-மந்திரியாக குமாரசாமி உள்ளார். இந்த நிலையில் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி மற்றும் அவரது சகோதரர் சதீஸ் ஜார்கிகோளி எம்.எல்.ஏ. ஆகியோர் கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். பெலகாவி மாவட்ட காங்கிரஸ் விவகாரங்களில் மந்திரி டி.கே. சிவக்குமார் தலையிடக்கூடாது, லட்சுமி ஹெப்பால்கருக்்கு மந்திரி பதவி வழங்கக்கூடாது என்று அவர்கள் நிபந்தனை விதித்தனர்.
இதனால் கூட்டணி ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் நேற்று முன்தினம் நேரில் சந்தித்து பேசினர். அப்போது, கூட்டணி ஆட்சியில் குழப்பம் வராமல் பார்த்துக்கொள்ளும்படி தலைவர்களுக்கு ராகுல் காந்தி உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து சதீஸ் ஜார்கிகோளி நேற்று டெல்லி சென்று காங்கிரஸ் மேலிட தலைவர்களை சந்தித்து பேசினார். இந்த பிரச்சினை முடிவுக்கு வந்ததாக அவர் அறிவித்தார். கூட்டணி ஆட்சிக்கு எழுந்த சிக்கல் முடிந்துவிட்டதாக கருதி காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் நிம்மதி அடைந்தனர்.இந்த நிலையில் காங்கிரசை சேர்ந்த மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி, ஆனந்த்சிங், நாகேந்திரா உள்பட அதிருப்தியில் உள்ள சுமார் 20 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசுக்கு எதிராக திரும்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்கள் மும்பை செல்ல இருப்பதாகவும், அவர்களை தங்க வைக்க மராட்டிய முதல்-மந்திரி தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளதாக கூறப்படுகிறது. மராட்டியத்தில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மும்பை செல்வதற்கு முன்பு, அந்த எம்.எல்.ஏ.க்கள் கவர்னரை நேரில் சந்தித்து, இந்த அரசுக்கு தாங்கள் கொடுக்கும் ஆதரவை வாபஸ் பெறுவதாக கூறி கடிதம் ஒன்றை கொடுக்கவும் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கூட்டணி ஆட்சிக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.