கரூர் நகராட்சி பகுதியில் ரூ.47 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்
கரூர் நகராட்சி பகுதியில் முடிவுற்ற ரூ.47 லட்சத்தில் ஆன வளர்ச்சி பணிகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
கரூர்,
கரூர் நகராட்சி, கோடங்கிபட்டி வார்டு எண்-43 ஆதிதிராவிடர் காலனி மற்றும் முத்தாலம்மன் நகர் ஆகிய பகுதிகளில் ரூ.6 லட்சம் மதிப்பிலான புதிய ஆழ்துளை கிணறு அமைத்து மின் மோட்டார் பொருத்திய குடிநீர் தொட்டியின் மூலம் குடிநீர் வினியோகத்தினையும், குமரன் உயர்நிலைப்பள்ளியில் ரூ.25 லட்சம் மதிப்பிலான புதிய கழிப்பறை கட்டிடம், கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.12 லட்சம் மதிப்பிலான பல்வகை பயன்பாட்டு மேடை, தரைதளம் மற்றும் ரூ.4 லட்சம் மதிப்பிலான கற்களால் உருவாக்கப்பட்ட உலக வரைபடத்தையும் என மொத்தம் ரூ.47 லட்சம் மதிப்பிலான முடிவுற்ற பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு மேற்கண்ட பணிகளை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் மாணவ- மாணவிகளின் கல்வியை மேம்படுத்த மறைந்த எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். மறைந்த ஜெயலலிதா 14 வகையான விலையில்லா உபகரணங்களை வழங்கி கல்வியை மேலும் மேம்படுத்தினார். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் கல்வி கற்பிக்கப்படுகிறது. இதை பயன்படுத்தி மாணவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைய முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் எஸ்.கவிதா, நகராட்சி ஆணையர் செந்தில்முருகன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனந்தநாராயணன், கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், கரூர் மாவட்ட அ.தி.மு.க. அவை தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ், கரூர் நகர செயலாளர் நெடுஞ்செழியன், கரூர் நகர கூட்டுறவு வங்கி தலைவர் திருவிக, மாவட்ட துணை செயலாளர் பி.சிவசாமி, கரூர் ஒன்றிய செயலாளர் என்ஜினீயர் கே.கமலகண்ணன், முன்னாள் நகர் மன்ற தலைவர் எம்.செல்வராஜ், முன்னாள் மாணவரணி செயலாளர் என்.தானேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story