அரியலூர் மாவட்டத்தில் ரேஷன் கடை, இ-சேவை மையத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு


அரியலூர் மாவட்டத்தில் ரேஷன் கடை, இ-சேவை மையத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு
x
தினத்தந்தி 21 Sep 2018 2:01 AM GMT (Updated: 21 Sep 2018 2:01 AM GMT)

அரியலூர் மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கவர்னர் பன்வாரிலால் புரோகித், ரேஷன் கடை, இ-சேவை மையத்தில் ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

அரியலூர், 

அரியலூர் மாவட்டத்தில் மத்திய-மாநில அரசுகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று ஆய்வு செய்தார். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டார்.

காலையில் முதல் நிகழ்ச்சியாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அரியலூர் காமராஜர் திடலில், நகராட்சியின் சார்பில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் மற்றும் மத்திய-மாநில அரசுகளின் திட்டங்கள் பற்றிய புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்.

அதனைத்தொடர்ந்து தூய்மை இந்தியா குறித்த உறுதிமொழியினை கவர்னர் வாசிக்க, அவரை பின் தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் திரும்ப கூறி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

பின்னர் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் மகளிர் சுயஉதவி குழுவுக்கு, பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணி பைகள் தயாரிக்க தையல் எந்திரமும், ரூ.2 லட்சத்துக்கான வங்கி வரைவோலையையும் கவர்னர் வழங்கினார். பின்னர், அரியலூர் காமராஜர் திடலில் இருந்து நகராட்சி அலுவலகம் வரைக்கும் சென்ற தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு ரதத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதையடுத்து சுகாதாரத்துறையின் சார்பில், அரியலூர் ஐ.எம்.ஏ. ஹாலில் நடைபெற்ற ரத்ததான முகாமை கவர்னர் தொடங்கி வைத்து, ரத்ததானம் செய்தோருக்கு பழங்கள் வழங்கி பாராட்டினார். முகாமில் 105 பேர் ரத்த தானம் செய்தனர்.

அதனைத்தொடர்ந்து கவர்னர் காட்டுப்பிரிங்கியம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் இயங்கும் இ-சேவை மையத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களை ஆய்வு செய்தார். தொடர்ந்து காட்டுப்பிரிங்கியம் ரேஷன் கடையில் வினியோகிக்கப்படும் அரிசியின் தரத்தை ஆய்வு செய்தார்.

இதையடுத்து ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரெட்டிபாளையத்தில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரிக்கப்பட்டு, அதிலிருந்து மண்புழு உரம் தயாரிக்கப்படுவதை கவர்னர் ஆய்வு செய்து, மரக்கன்றுகளை நட்டு வைத்தார். தொடர்ந்து, ரெட்டிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியிலும் தூய்மை இந்தியா குறித்த உறுதிமொழியினை கவர்னர் வாசிக்க, மற்றவர்கள் தொடர்ந்து கூறி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

பின்னர் அரியலூர், திருமானூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் தூய்மை பாரதம் இயக்கத்தின் கீழ் தூய்மை பணியை சிறப்பாக செயல்படுத்திய, தூய்மை காவலர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களையும், தூய்மை இந்தியா குறித்து மாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளிடையே நடத்தப்பட்ட பேச்சு, கவிதை, ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கி, கவர்னர் பாராட்டினார்.

அதனைத்தொடர்ந்து அரியலூர் அரசு விருந்தினர் மாளிகையில், அனைத்து அரசு அலுவலர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் அரியலூர் மாவட்டத்தின் வளர்ச்சிப்பணிகள் குறித்த விளக்க தொகுப்பினை கவர்னர் பார்வையிட்டார். மதிய உணவுக்கு பிறகு, அரசு விருந்தினர் மாளிகையில் மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய சுமார் 200-க்கும் மேற்பட்ட மனுக்களை கவர்னர் பன்வாரிலால் புரோகித் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சிகளில் கவர்னரின் கூடுதல் தலைமை செயலாளர் ராஜகோபால், அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி, அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகேஷ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிகளை முடித்த பின் கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று இரவு கார் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை சென்றார்.

Next Story