செங்கோட்டை அருகே ரூ.9 லட்சம் கள்ளநோட்டுகளுடன் பெண் உள்பட 4 பேர் கைது


செங்கோட்டை அருகே ரூ.9 லட்சம் கள்ளநோட்டுகளுடன் பெண் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 21 Sept 2018 1:26 PM IST (Updated: 21 Sept 2018 1:26 PM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டை அருகே ரூ.9 லட்சம் கள்ளநோட்டுகளுடன் பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

செங்கோட்டை,

செங்கோட்டை அருகே ரூ.9 லட்சம் கள்ளநோட்டுகளுடன் பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய ஒருவரை தேடி வருகிறார்கள்.

தீவிர தேடுதல் வேட்டை

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே, தமிழக-கேரள எல்லையில் கேரள மாநிலம் புனலூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடும் கும்பல் நடமாட்டம் இருப்பதாக கொல்லம் புறநகர் போலீஸ் சூப்பிரண்டு அசோகனுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கள்ள ரூபாய் நோட்டு கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடந்தது. இந்த தனிப்படையினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 4 பேரை கைது செய்தனர். அவர்கள் போலீசாரிடம், ரூ.1 லட்சம் கள்ள நோட்டுகளை மாற்ற ரூ.5 ஆயிரம் கமிஷன் தருவதாக கூறி ஒரு கும்பல் அழைத்து சென்றதாகவும், அவர்களிடம் தான் கள்ள நோட்டுகள் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

4 பேர் பிடிபட்டனர்

இதையடுத்து அந்த கும்பலை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நிலையில் புனலூர் பஜார் பகுதியில் ஒரு கும்பல் கள்ளநோட்டுகளுடன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று அதிரடியாக அந்த கும்பலை சுற்றி வளைத்தனர். அப்போது பெண் உள்பட 4 பேர் போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர். ஒருவர் மட்டும் தப்பி ஓடி விட்டார். பிடிபட்டவர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ராதா (வயது 35), பினு (39), குமார் (37), சதீசன் (30) என்பதும், தப்பி ஓடியவர் சுனில் (40) என்பதும் தெரியவந்தது. பிடிபட்டவர்களிடம் கத்தை, கத்தையாக கள்ள ரூபாய் நோட்டுகள் இருப்பதும் தெரிந்தது.

ரூ.9 லட்சம் கள்ளநோட்டுகள்

இதையடுத்து புனலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.9 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை அனைத்தும் ரூ.2 ஆயிரம், ரூ.500 கள்ள நோட்டுகள் ஆகும்.

கைதானவர்கள் தங்களுக்கு சுனிலிடம் இருந்துதான் கள்ள நோட்டுகள் வந்ததாகவும், அதை அவர் எங்கிருந்து கொண்டு வந்தார் என்பது தங்களுக்கு தெரியாது என்றும் போலீசாரிடம் தெரிவித்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தப்பி ஓடிய சுனிலை தேடி வருகிறார்கள். கள்ள ரூபாய் நோட்டுகளுடன் 4 பேர் கும்பல் பிடிபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story