நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து


நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து
x
தினத்தந்தி 21 Sep 2018 9:18 AM GMT (Updated: 21 Sep 2018 9:18 AM GMT)

நெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து உள்ளது.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து உள்ளது.

பரவலாக மழை

நெல்லையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது. பகல் நேரத்தில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்தது. நேற்றும் காலையில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் நெல்லை பகுதியில் மதியம் 2.30 மணி அளவில் வானத்தில் கருமேகங்கள் ஒன்று கூடி மேககூட்டமாக காட்சி அளித்தது. மாலை 3.30 மணிக்கு மழை பெய்தது. சுமார் ½ மணி நேரம் நீடித்த பரவலான மழையால் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம், ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதேபோல் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு, பஸ்நிலையம் பகுதியிலும் மழை பெய்தது.

குற்றாலம்

தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 11.15 மணிக்கு திடீரென பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 12.30 மணி வரை சுமார் 1¼ மணி நேரம் பெய்தது. இதனால் தென்காசி பகுதியில் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் தண்ணீர் வரத்து தொடங்கி உள்ளது. இதில் குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகள் குளித்து சென்றனர். இதேபோல் வள்ளியூர், பணகுடி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

Next Story