தென்காசி அருகே வடகரையில் காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசம் மேலும் ஒரு ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்


தென்காசி அருகே வடகரையில் காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசம் மேலும் ஒரு ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்
x
தினத்தந்தி 21 Sep 2018 9:30 PM GMT (Updated: 21 Sep 2018 2:07 PM GMT)

தென்காசி அருகே வடகரையில் காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசம் செய்ததால் மேலும் ஒரு ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்தது.

தென்காசி, 

தென்காசி அருகே வடகரையில் காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசம் செய்ததால் மேலும் ஒரு ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்தது.

காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசம்

தென்காசி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது வடகரை. இங்கு விவசாயிகள் நெல், தென்னை, வாழை போன்றவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்கள். நீண்ட காலமாக காட்டு யானைகள் இரவில் இங்கு வந்து இந்த பயிர்களை அழித்து வருவது வாடிக்கையாகி விட்டது. இதனால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

கடந்த சில மாதங்களாகவே யானைக்கூட்டம் இங்குள்ள வாழை, தென்னை மரங்களை அழித்து வந்தன. வடகரையில் இருந்து அடவி நயினார் அணைக்கு செல்லும் சாலையில் மேட்டுக்கால் பகுதியில் செம்போடை என்ற இடத்தில் கடந்த 16–ம் தேதி ஒரு ஏக்கர் நெற்பயிரை காட்டு யானைகள் பிடுங்கி தின்று சேதம் விளைவித்தன.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளன. மகுதண்ணன் என்பவருக்கு சொந்தமான வயலில் 4 யானைகள் புகுந்து நெற்பயிர்களை பிடுங்கி தின்றுள்ளன. இதில் ஒரு ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்தன. நேற்று காலையில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் பட்டாசு வெடித்து யானைகளை விரட்டினர்.

நிவாரணம் வழங்க வேண்டும்

இதுகுறித்து தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில செயலாளர் ஜாகிர் உசேன் கூறுகையில், எங்களது பகுதியில் தொடர்ந்து யானைகளின் அட்டகாசம் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தென்னை, வாழை போன்றவற்றை மட்டும் அழித்து வந்த யானைகள் தற்போது நெற்பயிரையும் அழிக்கின்றன. ஒரு பகுதியில் விரட்டிவிடும் போது அடுத்த பகுதிக்குள் யானைகள் சென்று விடுகின்றன. வடகரை, அச்சன்புதூர் பகுதியில் இருந்து கடையநல்லூர் வரை யானைகள் இடம்பெயர்ந்து வருகின்றன. இந்த யானைகளால் விவசாயிகளாகிய எங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இழப்புக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அரசை கேட்டுக் கொள்கிறோம் என்றார்.


Next Story