சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சிக்கு வங்கிகளின் பங்கு முக்கியமானது - கலெக்டர் ஜெயகாந்தன் பேச்சு


சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சிக்கு வங்கிகளின் பங்கு முக்கியமானது - கலெக்டர் ஜெயகாந்தன் பேச்சு
x
தினத்தந்தி 21 Sep 2018 10:15 PM GMT (Updated: 21 Sep 2018 5:36 PM GMT)

கிராமப் பகுதியில் உள்ள சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சிக்கு வங்கிகளின் பங்கு முக்கியமானது என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.

சிவகங்கை,

சிவகங்கையில் வங்கியாளர்களுக்கான ஒருநாள் புரிந்துணர்வு பயிற்சி மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. பயிற்சியை தொடங்கி வைத்து கலெக்டர் ஜெயகாந்தன் பேசியதாவது:-

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சுயஉதவிக் குழுக்கள் அமைத்து தனி மனித பொருளாதார முன்னேற்றத்தில் சிறந்து விளங்கும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத் திட்டத்தில் முக்கிய பங்கு வங்கியாளர்களைத்தான் சேரும். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் அனைத்து கிராமப்புற பகுதிகளில் உள்ள கூட்டுறவு வங்கிகள் ஒருங்கிணைக்கப்பட்டு தேவையான தொழில் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் கிராம பகுதிகளில் தற்போது அரசே சுய உதவி குழுக்கள் அமைத்து அந்த குழுக்களுக்கு தேவையான தொழில் பயிற்சி வழங்குவதுடன் மட்டுமல்லாமல் கடன் உதவியும் வழங்கி வருகிறது. இதையடுத்து அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப சிறு தொழில் மையங்கள் அமைக்கப்பட்டு அங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்ற இடங்களுக்கு கொள்முதல் செய்து விற்பனை செய்வதற்கு வழிவகை செய்து வருகிறது. இதனால் மகளிர் சுய உதவிக்குழுக்களின் பொருளாதார முன்னேற்றமும் சிறந்து விளங்குகிறது.

எனவே கிராமப்புற பகுதியில் சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சிக்கு வங்கிகளின் பங்கு முக்கியமானது. அந்த வகையில் வங்கியாளர்களின் பணி சிறப்புடன் அமைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story