காரைக்குடி வனப்பகுதியில் தைல மரகன்றுகள் நடுவதற்கு எதிர்ப்பு கிராம மக்கள் முற்றுகை
காரைக்குடி வனப்பகுதியில் தைல மரகன்றுகள் நடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்குடி,
காரைக்குடி அருகே கண்டனூர்–மாத்தூர் காட்டு வழிப்பாதையில் வனத்துறைக்கு சொந்தமான சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பு உள்ளது. இந்த நிலப்பரப்பில் நேற்று காலை வனத்துறை அதிகாரி ஜோசப்ஆரோக்கியராஜ் தலைமையில் 50 வனத்துறை பணியாளர்கள் தைல மரக்கன்றுகள் நட முயன்றனர். இதையடுத்து கண்டனூர், மாத்தூர், வேங்காவயல், வலையன்வயல், இலுப்பக்குடி, கருவியப்பட்டி, பள்ளத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள 200–க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அங்கு திரண்டு மரக்கன்றுகள் நடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் இந்த மரக்கன்றுகள் இப்பகுதியில் நடுவதால் எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து குடிதண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். கண்மாய்களுக்கு வரும் நீர்வரத்து பகுதி பாதிக்கப்படும். இப்பகுதி விவசாயம் முற்றிலும் பாதிப்படையும் என்றும், இந்த காட்டுப்பகுதியில் இருந்து ஏராளமான குரங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்யும் நிலை உருவாகும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு காரைக்குடி தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரன் தலைமையிலான போலீசார் கிராம மக்கள் மற்றும் வனத்துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து வனத்துறையினர் மரக்கன்று நடும் பணியை கைவிட்டதால் சுமார் 2மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.