மனைவி இறந்த துக்கம் தாங்காமல் விஷம் குடித்து விவசாயி தற்கொலை


மனைவி இறந்த துக்கம் தாங்காமல் விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 22 Sept 2018 3:00 AM IST (Updated: 21 Sept 2018 11:20 PM IST)
t-max-icont-min-icon

வாய்மேடு அருகே மனைவி இறந்த துக்கம் தாங்காமல் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார். அடுத்தடுத்து மனைவியும், கணவனும் இறந்ததால் இருவரது உடல்களையும் ஒரே இடத்தில் தகனம் செய்தனர்.

வாய்மேடு,


நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த ஆரியங்காடு தகட்டூர் பகுதியை சேர்ந்தவர் வீரன்(வயது 85). விவசாயி. இவரது மனைவி செல்லம்மாள்(75). இவர்களுக்கு வேதையன், காரியப்பன் என்ற இரண்டு மகன்கள். இருவரும் தங்கள் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். வீரனும், செல்லம்மாளும் மட்டும் தனியாக வசித்து வந்தனர். இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து இருக்க மாட்டார்கள். எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாகவே சென்று வருவார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு செல்லம்மாளுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அறிந்து வீரன் பதறிப்போனார். உடனடியாக அவருக்கு சிகிச்சைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்தார். ஆனாலும் சிறிது நேரத்தில் செல்லம்மாள் பரிதாபமாக இறந்தார்.

தன்னுடன் இத்தனை நாட்கள் குடும்பம் நடத்திய மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றதால் வீரன் மிகுந்த மனமுடைந்தார். மனைவி இல்லாத ஒரு வாழ்க்கையை அவரால் நினைத்துப்பார்க்க முடியவில்லை. இதனையடுத்து தனது மனைவி சென்ற இடத்துக்கே தானும் செல்ல முடிவெடுத்து வீட்டில் வயலுக்கு அடிப்பதற்காக வைத்து இருந்த பூச்சி மருந்தை(விஷம்) எடுத்து குடித்தார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார்.

அதை பார்த்ததும் வீரனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், கிராமத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை அக்கம், பக்கத்தினர் சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை வீரனும் பரிதாபமாக இறந்தார்.

வாழ்வில் இணைபிரியாத தம்பதியினராக வாழ்ந்த வீரனும், செல்லம்மாளும் சாவிலும் இணைபிரியாத சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வாய்மேடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட வீரனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் நேற்று மாலை அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கு கணவன்-மனைவி இருவருக்கும் இறுதி சடங்குகள் செய்யப்பட்டது. பின்னர் இருவருடைய உடல்களும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டது. 

Next Story