ஜாக்டோ–ஜியோ சார்பில் அடையாள வேலை நிறுத்த போராட்டம், வருகிற 4–ந்தேதி நடக்கிறது
பழைய ஓய்வூதிய திட்டத்தினை தொடர வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 4–ந்தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம்,
மாவட்ட ஜாக்டோ–ஜியோ உயர்மட்டக்குழு கூட்டம் ஒருங்கிணைப்பாளர் சேகர் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் லியோஜெரால்டு எமர்சன் வரவேற்று பேசினார். இந்த கூட்டத்தில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும், மதிப்பூதிய, தொகுப்பூதிய ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை உடனடியாக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிற (அக்டோபர்) 4–ந்தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த போராட்டத்திற்கான பிரச்சார பயணத்தை வருகிற 24–ந்தேதி முதல் மாவட்டம் முழுவதும் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
அதன் பின்னரும் தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் நீதிமன்ற தடையை மீறி வருகிற நவம்பர் 27–ந்தேதி முதல் மாநிலம் தழுவிய தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் முனியசாமி, தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் லாரன்ஸ், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் சந்தானகிருஷ்ணன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் தங்கமணி, அனைத்து மைய வள ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் திலகராஜன், உயர்நிலை–மேல்நிலை பள்ளி கணினி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் ரவி, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயலாளர் லிங்கதுரை முடிவில் நன்றி கூறினார்.