எச்.ராஜா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு
அறநிலையத்துறை அதிகாரிகளை அவதூறாக பேசிய எச்.ராஜா மீது 5 பிரிவுகளின் கீழ் தஞ்சை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பணியாளர்களை பற்றி அவதூறாகவும், அவர்களது வீட்டு பெண்களை அவமதிக்கும் வகையிலும் பேசியதாக தெரிகிறது.
இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை அதிகாரிகள், பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் எச்.ராஜா மீது போலீஸ் நிலையங்களிலும் புகார் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தஞ்சை மாவட்டம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, எச்.ராஜாவை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
பின்னர் எச்.ராஜாவுக்கு எதிராக தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் தமிழ்நாடு திருக்கோவில் பணியாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் கண்ணன் புகார் அளித்தார்.
அதன்பேரில் நேற்றுமுன்தினம் எச்.ராஜா மீது இந்திய தண்டனை சட்டம் 353(அரசு பணி செய்யவிடாமல் இடையூறு செய்தல்), 354(பெண்களை மானபங்கப்படுத்தும் நோக்கத்தில் பேசுதல்), பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story