எரிவாயு தகனமேடை செயல்படாததால் இறந்தவரின் உடலை திறந்தவெளியில் எரிக்கும் அவலம்


எரிவாயு தகனமேடை செயல்படாததால் இறந்தவரின் உடலை திறந்தவெளியில் எரிக்கும் அவலம்
x
தினத்தந்தி 22 Sept 2018 4:00 AM IST (Updated: 21 Sept 2018 11:38 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் நகரசபை பகுதியில் உள்ள எரிவாயு தகனமேடை செயல்படாததால் அந்த பகுதியில் திறந்தவெளியில் இறந்தவர்களின் உடலை எரிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் நகரசபை பகுதியில் உள்ள அல்லிக்கண்மாய் சுடுகாட்டில் கடந்த காலங்களில் இறந்தவர்களின் உடலை எரித்தும், புதைத்தும் வந்தனர். இதனால் கடந்த 2012–ம் ஆண்டு எரிவாயு தகனமேடை அமைக்கப்பட்டு, அதில் இறந்தவர்களின் உடலை எரித்து அஸ்தி வழங்கப்பட்டு வந்தது. இதற்காக நகராட்சியில் உரிய பணம் செலுத்தி ரசீதுகொண்டு சென்றால் இறந்தவரின் உடல் எரிக்கப்படும் நடைமுறை இதுநாள் வரை இருந்து வந்தது.

இந்நிலையில் எரிவாயு தகனமேடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக இறந்தவர்களின் உடலை எரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இறந்தவர்களின் உடலை கொண்டு வந்து திறந்தவெளியில் எரிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இறந்தவர்களின் உடலை திறந்த வெளியில் எரிக்கும் நிலையை மாற்றி நவீன தகனமேடை அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்த நிலையில் மீண்டும் பழைய நிலைக்கு சென்றுள்ளது பொதுமக்களை கவலை அடைய செய்துள்ளது. எரிவாயு தகனமேடையில் உள்ள பழுதை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்காததால் இந்த நிலை நாட்கணக்கில் நீடித்து வருவதாக பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது பழுது சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் எரிவாயு தகனமேடை செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்றார்.


Next Story