புழல் சிறையில் கைதிகளிடம் செல்போன்கள், சிம்கார்டுகள் பறிமுதல்


புழல் சிறையில் கைதிகளிடம்  செல்போன்கள், சிம்கார்டுகள் பறிமுதல்
x
தினத்தந்தி 22 Sept 2018 3:00 AM IST (Updated: 22 Sept 2018 12:34 AM IST)
t-max-icont-min-icon

புழல் சிறையில் மீண்டும் அதிரடி சோதனை நடத்தியதில் கைதிகளிடம் இருந்து 4 செல்போன்கள், பேட்டரிகள் மற்றும் சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

செங்குன்றம்,

சென்னையை அடுத்த புழல் மத்திய சிறைச்சாலையில் 750-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகளும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை கைதிகளும், பெண்கள் சிறையில் 150-க்கும் மேற்பட்ட பெண் கைதிகளும் அடைக்கப்பட்டு உள்ளனர்.

தண்டனை சிறையில் அடைக்கப்பட்டு உள்ள கைதிகள் சிலர், சிறைத்துறை அதிகாரிகள் உதவியுடன் ஆடம்பர உடைகள், வெளியில் இருந்து வரவழைக்கப்பட்ட விதவிதமான உணவுகள், விலை உயர்ந்த செல்போன்கள் என சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக 5 கைதிகளும், சிறை வார்டன்களும் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து புழல் சிறையில் அடிக்கடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட சிறை போலீசார் நேற்று காலை மீண்டும் புழல் தண்டனை சிறையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளான அய்யப்பன்(வயது 47), குலசேகரன்(49) ஆகிய 2 பேரிடம் இருந்து தலா 2 செல்போன்கள், பேட்டரிகள், சிம்கார்டுகள் என மொத்தம் 4 செல்போன்கள், 4 பேட்டரிகள், 4 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து சிறை அதிகாரிகள் சார்பில், புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நடராஜ் வழக்குப்பதிவு செய்து, புழல் சிறைக்குள் உள்ள கைதிகளுக்கு செல்போன், சிம்கார்டுகள் கிடைத்தது எப்படி?, செல்போன்களை வைத்து அவர்கள் யாரிடம் பேசினார்கள்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

கைதி அய்யப்பன், சிறைத்துறை டி.ஐ.ஜி. வீட்டில் தோட்டவேலைகள் செய்து வந்தார். தற்போது அவரிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதால், இது தொடர்பாக டி.ஐ.ஜி. வீட்டில் சிறை கண்காணிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதாக தகவல் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால், அதுபோன்ற சோதனை எதுவும் டி.ஐ.ஜி. வீட்டில் நடைபெறவில்லை என பின்னர் உறுதி செய்யப்பட்டது.

Next Story