கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரி: குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் பெண் சாவு - கலெக்டரிடம் கணவர் புகார்


கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரி: குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் பெண் சாவு - கலெக்டரிடம் கணவர் புகார்
x
தினத்தந்தி 22 Sept 2018 4:45 AM IST (Updated: 22 Sept 2018 12:53 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்ற சிறிது நேரத்தில் பெண் இறந்தார். இது குறித்து அவருடைய கணவர், கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் மேலுமலையை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 29). இவர் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு தனது உறவினர்களுடன் வந்து கலெக்டர் பிரபாகரனிடம் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:- நான் கூலித்தொழில் செய்து வருகிறேன். எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இரண்டாவது பிரசவத்திற்காக கடந்த 19-ந் தேதி இரவு 9 மணிக்கு, எனது மனைவி நந்தினியை (23) கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தேன். அதிகாலை 2.37 மணிக்கு ஆபரேசன் செய்து ஆண் குழந்தையை எடுத்தனர். என் மனைவிக்கு ரத்தம் இல்லை என்று டாக்டர்கள் சொன்னார்கள்.

பின்னர் குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் செய்ய வற்புறுத்தி அதையும் செய்தார்கள். 20-ந் தேதி காலை 8 மணி வரை தாயும், சேயும் நலமாக உள்ளனர் என டாக்டர்கள் தெரிவித்தனர். அதன் பின்னர் என் மனைவிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டது. பல முறை கூறியும் சிசிக்சை செய்யாமல் இருந்தனர்.

எனது மனைவி வலியால் துடித்து கொண்டிருந்தார். அதனால் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறோம் என்று கூறியும், நாங்கள் சரி செய்துவிடுகிறோம் என்று கூறி அனுப்பமறுத்தனர். பின்னர் பல மணி நேரம் காக்கவைத்து, என் மனைவி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தாமதமாக சிகிச்சை அளித்து என் மனைவியின் இறப்பிற்கு காரணமாக இருந்தவர்கள் எனக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனது மனைவி இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Next Story