சென்னையில், தமிழர் தேசிய கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


சென்னையில், தமிழர் தேசிய கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Sep 2018 11:15 PM GMT (Updated: 21 Sep 2018 7:41 PM GMT)

ராஜீவ்காந்தி கொலை கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழர் தேசிய கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னை,

ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழர் தேசிய கூட்டமைப்பின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலை வகித்தார்.

இதில் ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் வினோத், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் கே.எம்.செரிப், தமிழர் தேசிய விடுதலை கழகம் சார்பில் ஜோசப் கென்னடி, தமிழர் நல பேரியக்கம் சார்பில் மு.களஞ்சியம், மருது மக்கள் இயக்கம் சார்பில் செ.முத்துபாண்டியன், நடிகர் மன்சூர் அலிகான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் குறித்து சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:- ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்வது மாநில அரசின் கையில் இருக்கிறது. கவர்னரின் ஒப்புதலோடு அவர்களை விடுதலை செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. இப்படிப்பட்ட தீர்ப்புக்காக தான் நாங்கள் போராடினோம்.

தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி கவர்னருக்கு அந்த கோரிக்கையை முன்வைத்து இருக்கிறது. கவர்னர் எங்கள் போராட்ட உணர்வுகளை புரிந்துகொண்டு 7 தமிழர்களையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்யவேண்டும். மத்திய அரசுக்கு அனுப்பி கருத்து கேட்டு, பிறகு முடிவு செய்கிறேன் என்று கவர்னர் சொல்வது, காலம் தாழ்த்துவது ஆகும்.

தி.மு.க. அதிகாரத்தில் இருக்கும்போது விடுதலை செய்வதற்கான வேலையை செய்யவில்லை. தேர்தல் நேரம் வரும்போது மட்டும் பேசுவார்கள். 7 பேரை விடுதலை செய்வது எங்களின் தலையாய கடமை. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story