வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த ஒகேனக்கல் மெயின் அருவி பகுதியில் சீரமைக்கும் பணி தீவிரம்


வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த ஒகேனக்கல் மெயின் அருவி பகுதியில் சீரமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 21 Sep 2018 11:15 PM GMT (Updated: 2018-09-22T01:24:27+05:30)

வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த ஒகேனக்கல் மெயின் அருவி பகுதியில் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பென்னாகரம்,

கேரளா, கர்நாடக மாநிலத்தில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு பெய்த கனமழையால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இதனால் இந்த 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 2 லட்சம் கனஅடிக்கு மேல் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன்காரணமாக ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நடைபாதை, மெயின் அருவி, பெண்கள் குளிக்கும் அருவி, சினிபால்ஸ், தொங்குபாலம் உள்ளிட்ட பகுதிகள் சேதமடைந்தது.

இதனால் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது. இந்த தடை தொடர்ந்து நீடிக்கிறது. ஒனேக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக குறைந்ததால் சேதமடைந்த பகுதிகளை சீரமைத்து அருவியில் குளிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.

இந்தநிலையில் மெயின் அருவி பகுதியில் தடுப்பு கம்பிகள் மற்றும் கைப்பிடிகள் சீரமைக்கும் பணி இரவு பகலாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இதையடுத்து பெண்கள் குளிக்கும் அருவி சீரமைக்கும் பணி தொடங்கப்படும். இந்த பணிகள் முடிவடைந்த பின்னர் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்படும். மேலும் தொங்குபாலம், சினிபால்ஸ், நடைபாதை ஆகிய இடங்களிலும் சீரமைக்கும் பணி தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story