சென்னையில் 2–ந்தேதி காந்தி சிலை முன்பு ‘கள்’ படையலிட்டு போராட்டம் - நல்லசாமி பேட்டி
சென்னையில் 2–ந்தேதி காந்தி சிலை முன்பு ‘கள்’ படையலிட்டு போராட்டம் நடத்தப்போவதாக ‘கள்’ இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.
தாராபுரம்,
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழ்நாடு ‘கள்’ இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழகத்தில் தென்னை மற்றும் பனை விவசாயிகளின் வாழ்வாதாரம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக தான், தமிழக அரசு கள்ளுக்கு விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என்று நீண்ட காலமாக போராடி வருகிறோம். ‘கள்’ போதை பொருளோ மதுவோ அல்ல. அது உணவின் ஒரு பகுதி என்பதை இங்குள்ளவர்கள் நன்கு அறிவார்கள்.ஆனாலும் கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுக்கிறார்கள்.
காரணம் இன்றைக்கு மதுவை உற்பத்தி செய்யும் பல நிறுவனங்களை அரசியல் வாதிகள் தான் மறைமுகமாக நடத்தி வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் அடுத்த மாதம்(அக்டோபர்) 2–ந் தேதி காந்தி ஜெயந்தியன்று தமிழகத்தில் பூர்ண மதுவிலக்கு கோரி, காந்தியவாதியான குமரிஅனந்தன் சென்னையில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தெரிவித்துள்ளார். இதை ‘கள்’ இயக்கம் வரவேற்கிறது.
அந்த வகையில் அவருடைய போராட்டத்தில் கள்ளுக்கு எதிர்ப்பு உள்ளதா? இல்லையா? என்பதை அவர் தெரியப்படுத்த வேண்டும். ‘கள்’ மதுபானம் என்றால் அவர் எங்களோடு வாதிட வேண்டும். மதுவுக்கு எதிரான குமரிஅனந்தனின் உண்ணாவிரத போராட்டத்திற்கு தலைமை ஏற்பவர்கள் யார் என்பதை மக்கள் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு மறைமுகமாக ஆதரவு அளிப்பவர்களை தான் குமரிஅனந்தன் அழைத்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே இவருடைய போராட்டத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். கள்ளை உணவு பொருளாக ஏற்றுக் கொண்ட மகாத்மா காந்திக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 2 –ந் தேதி சென்னை கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலைக்கு முன்பாக ‘கள்’ படையல் போட்டு போராட்டம் நடத்த ‘கள்’ இயக்கம் முடிவு செய்துள்ளது. பொது மக்கள் எங்களுக்கு ஆதரவளிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.