கந்து வட்டி கேட்டு கடைக்காரர் மீது தாக்குதல்; அவமானத்தால் தற்கொலை முயற்சி


கந்து வட்டி கேட்டு கடைக்காரர் மீது தாக்குதல்; அவமானத்தால் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 22 Sept 2018 3:30 AM IST (Updated: 22 Sept 2018 2:04 AM IST)
t-max-icont-min-icon

தண்டராம்பட்டு அருகே கந்துவட்டி கேட்டு கடைக்காரரை செருப்பால் தாக்கியதால் அவமானம் அடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இது தொடர்பாக 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தண்டராம்பட்டு,


திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியம் தானிப்பாடி பட்டி தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் ராஜேஷ் (வயது 27), தானிப்பாடியில் பேன்சி ஸ்டோர் வைத்துள்ளார். இவர், அங்குள்ள கந்து வட்டிக்காரரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். இதற்கான தொகையை நாள் தோறும் ரூ.500 வீதம் திருப்பி செலுத்த வேண்டும். மழை காரணமாக வியாபாரம் சரிவர நடைபெறாததால், கடந்த 3 நாட்களாக ராஜேஷ் பணம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் கடன் தொகையை வசூலிக்க அதே ஊரை சேர்ந்த பூபாலன் (29), பவுன்குமார் (28) ஆகிய 2 பேர், ராஜேசின் கடைக்கு சென்றனர். பின்னர் அவர்கள், ராஜேசிடம் பணம் கேட்டு உள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.

இதில் ஆத்திரமடைந்த பூபாலன், பவுன்குமார் ஆகியோர் செருப்பால் ராஜேஷை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவமானம் அடைந்த ராஜேஷ் எலி மருந்து (விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதைகண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தானிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து தானிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பூபாலன், பவுன்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story