ஜாமீன் வழங்க போலி ஆவணங்கள்: வக்கீல், அரசு டாக்டர்கள் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு


ஜாமீன் வழங்க போலி ஆவணங்கள்: வக்கீல், அரசு டாக்டர்கள் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 21 Sep 2018 10:45 PM GMT (Updated: 21 Sep 2018 9:20 PM GMT)

போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதானவருக்கு ஜாமீன் வழங்க போலி ஆவணங்களை கொடுத்ததாக கூறி வக்கீல், 2 அரசு டாக்டர்கள் உள்பட 6 பேர் மீது 6 பிரிவுகளில் மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து போதை ஊசி மற்றும் மருந்துகளை கடத்தி வந்து கோவையில் அதிக விலைக்கு விற்பனை செய்தது தொடர்பாக பெங்களூரை சேர்ந்த ஜான் இமானுவேல்(வயது 28), கோவையை சேர்ந்த முகமது சிகாப்(22), ஜூல்பிகர் அலி(24), முகமது அனாஸ்(24) ஆகியோரை காட்டூர் போலீசார் கடந்த ஜூலை மாதம் 24–ந் தேதி கைது செய்தனர். அதன் பின்னர் அவர்கள் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் முகமது சிகாப் தனக்கு வலிப்பு நோய் இருப்பதாலும் திருமணம் நடைபெற உள்ளதாலும் தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி கோவை இன்றியமையா பண்டங்கள் சட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவுடன் டாக்டர்கள் ராதாகிருஷ்ணன், உஷா, மன்சூர் ஆகியோர் அளித்த மருத்துவ சான்றிதழ்களும், திருமண பத்திரிகையும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.

ஆனால் அந்த மருத்துவ சான்றிதழ்கள் மற்றும் திருமண பத்திரிகை மீது நீதிபதிக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அந்த மருத்துவ சான்றிதழ்களின் மீது உரிய விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்யுமாறு கோவை அரசு மருத்துவ கல்லூரி டீன் அசோகனுக்கும், திருமண பத்திரிகை குறித்து போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் விசாரணை நடத்தி அறிக்கையும் நீதிமன்றத்தில் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

விசாரணையில், முகமது சிகாப்புக்கு வலிப்பு நோய் இருப்பதாக தாக்கல் செய்யப்பட்ட மருத்துவ சான்றிதழ் போலியானது என்று தெரியவந்தது. எனவே போலி மருத்துவ சான்றிதழை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அவரது தரப்பு வக்கீல் ஜக்கரியா, அரசு ஆஸ்பத்திரி ஊழியர் பீர் முகமது, டாக்டர்கள் ராமகிருஷ்ணன், உஷா, மன்சூர் மற்றும் திருமண பத்திரிகை தயார் செய்து கொடுத்த சிகாப்பின் சகோதரர் முகமது ஷாகித் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு கோவை இன்றியமையா பண்டங்கள் சட்ட நீதிமன்ற (பொறுப்பு) நீதிபதி சஞ்சய்பாபா கடந்த 11–ந் தேதி உத்தரவிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து கோவை இன்றியமையா பண்டங்கள் சட்ட நீதிமன்ற தலைமை எழுத்தர் வசந்தகுமாரி கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வக்கீல் ஜக்கரியா, அரசு டாக்டர்கள் உஷா, மன்சூர், நரம்பியல் நிபுணர் டாக்டர் ராமகிருஷ்ணன், அரசு ஆஸ்பத்திரி ஊழியர் பீர்முகமது, சிகாப்பின் சகோதரர் முகமது ஷாகிப் ஆகிய 6 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 193(போலி ஆவணங்கள் தயாரித்தல்), 196(போலி ஆவணங்களை நீதிமன்ற நடைமுறைக்கு பயன்படுத்துதல்), 468(ஏமாற்றும் நோக்கத்துடன் போலி ஆவணங்களை பயன்படுத்துதல்), 471(போலி ஆவணங்களை உண்மை ஆவணங்கள் போன்று பயன்படுத்துதல்), 420(மோசடி) உள்பட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story