சிறைக்குள் கைதிகள் சொகுசு வாழ்க்கை அனுபவித்தது வேதனையளிக்கிறது - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


சிறைக்குள் கைதிகள் சொகுசு வாழ்க்கை அனுபவித்தது வேதனையளிக்கிறது - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
x
தினத்தந்தி 22 Sept 2018 4:30 AM IST (Updated: 22 Sept 2018 2:56 AM IST)
t-max-icont-min-icon

சிறைக்குள் கைதிகள் சொகுசு வாழ்க்கை நடத்தியது வேதனையளிக்கிறது என்று கோவையில் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

கோவை,

கோவையில் பா.ஜனதா கட்சி சார்பில், கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 4–வது முறையாக ரூ.10 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள் மற்றும் ரூ.2 லட்சத்துக்கான காசோலை ஆகியவற்றை அனுப்பும் நிகழ்ச்சி கோவை வி.கே.கே. மேனன் சாலையில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இதற்கு பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கி, நிவாரண பொருட்கள் எடுத்து செல்லும் சரக்கு வேன்களை கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதனை தொடர்ந்து அவர் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமாரின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் படுகொலை செய்யப்பட்டு, 2 ஆண்டுகள் ஆகிறது. இதுபோன்ற தாக்குதல்கள், படுகொலைகளை முடிவுக்குகொண்டு வரவேண்டும். இந்த கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட முபாரக் போன்றவர்கள் ஜாமீனில் வெளியே வந்து உள்ளனர். போலீசாரின் தவறான நடவடிக்கையினால் இவர்கள் வெளியே வந்துள்ளது வேதனையளிக்கிறது. இதுமட்டுமல்ல சென்னை புழல் சிறையில் ஆடிட்டர் ரமேஷ், பாடி சுரேஷ், டாக்டர் அரவிந்த ரெட்டி, வெள்ளையப்பன் ஆகியோரின் கொலையில் கைதுசெய்யப்பட்ட குற்றவாளிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து உள்ளனர். இது மிகுந்த வேதனையளிக்கிறது.

அங்கு பிரியாணி அரிசி, பருப்பு, செல்போன்கள், சிம்கார்டுகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்த பொருட்கள் எப்படி அந்த சிறைக்குள் சென்றது. குற்றவாளிகளின் கைகளில் செல்போன்கள் இருந்தால் அவர்கள் உள்ளே இருந்தவாறு பல குற்றங்களை நடத்த ஏதுவாக அமையும். தமிழக அரசு இதில் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பு காரணமாக அங்குள்ள மக்களுக்கு ஏற்கனவே 3 முறை நிவாரண பொருட்கள் அனுப்பி உள்ளோம். இன்று (நேற்று) 4–வது முறையாக அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பா.ஜனதா சார்பில் சென்னையில் இருந்து ரெயில் மூலம் கேரளாவில் பல்வேறு இடங்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வருகிறோம். அங்குள்ள மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வரை பா.ஜனதா கட்சி பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிவாரண பொருட்கள் கேரள மாநிலம் அட்டப்பாடி, அகழி உள்ளிட்ட பகுதிகளுக்கு எடுத்து செல்லப்பட்டு, அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படுகிறது.

இதில் மாவட்ட தலைவர் நந்தகுமார், கோட்ட பொறுப்பாளர்கள் ஜி.கே. செல்வகுமார், மாநில இளைஞர் அணி தலைவர் வசந்தராஜ், செய்தி தொடர்பாளர் சபரிகிரீஸ், மதன் மோகன், ஜான்சன், பிரபாகரன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story