போக்குவரத்து விதிகளை கடைபிடித்து விபத்துகளை குறைக்கவேண்டும்


போக்குவரத்து விதிகளை கடைபிடித்து விபத்துகளை குறைக்கவேண்டும்
x
தினத்தந்தி 21 Sep 2018 10:00 PM GMT (Updated: 2018-09-22T02:57:46+05:30)

வேலூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து விபத்துகளை குறைக்கவேண்டும் என்று விழிப்புணர்வு முகாமில் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் கேட்டுக்கொண்டார்.

வேலூர்,


வேலூர் மாவட்டத்தில் ஏற்படும் சாலை விபத்துகளை குறைப்பதற்காக சாலை பாதுகாப்பு கல்வி மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி வாகன டிரைவர்கள், ஆட்டோ டிரைவர்களுக்கான சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம் வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள காவலர் மண்டபத்தில் நேற்று நடந்தது.

போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ் குமார் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அதிவீரபாண்டியன், வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் சாலை விபத்துகள் ஏற்படுவதற்கான காரணங்கள், விபத்துகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், விபத்துகளை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கினர்.

போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் பேசியதாவது:-

பள்ளிகளுக்கு மாணவ - மாணவிகள் பஸ்களில் சென்று வருகிறார்கள். அவ்வாறு செல்பவர்களில் உலக அளவில் ஒரு நாளைக்கு 500 பேர் விபத்தில் சிக்கி உயிரிழக்கிறார்கள். இந்தியாவை பொறுத்தவரையில் ஒரு நாளைக்கு 50 பேர் இறக்கின்றனர். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நாம் எல்லோருமே சாலைகளை பயன்படுத்துகிறோம். சாலையை பயன்படுத்தாதவர்களே கிடையாது.
பள்ளி, கல்லூரி வாகனம் ஓட்டுபவர்கள் அதிக உயிர்களை ஏற்றிச்செல்கிறார்கள். அவர்களுக்கு பெரிய பொறுப்பு உள்ளது. இந்த ஆண்டு இதுவரையில் நடந்த விபத்துகளில் 370 பேர் இறந்துள்ளனர். இது கடந்த ஆண்டைவிட குறைவு என்றாலும் திருப்தியாக இல்லை. இந்த எண்ணிக்கையை இன்னும் குறைக்கவேண்டும்.

10 நிமிடத்திற்கு ஒரு உயிர் போகிறது. இதற்கு யார் காரணம். போலீசாரையோ, வட்டார போக்குவரத்து அலுவலரையோ குறைசொல்ல முடியாது. இதில் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. நாம் அனைவரும் சேர்ந்து முயற்சி செய்தால் விபத்துகளை குறைக்கலாம். அதற்கு போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது. அதே போன்று அதிவேகமாக வாகனங்களை ஓட்டாதீர்கள். தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் போது பின்னால் வாகனங்கள் வருகிறதா? என்பதை பார்த்து அதன்பிறகு சாலைகளை கடக்க வேண்டும். இதெல்லாம் சின்னசின்ன விஷயங்கள்தான். இதை அனைவரும் கடைபிடித்து விபத்துகளை குறைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஐதராபாத்தை சேர்ந்த வாசு, ராணிப்பேட்டையை சேர்ந்த அல்லிராணி ஆகியோர் கலந்துகொண்டு சாலை விபத்துகள் ஏற்படுவதற்கான காரணங்கள், அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து குறும்படம் மூலம் விளக்கினர்.

நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆசைதம்பி, துணை சூப்பிரண்டுகள் அலெக்ஸ், ஜெயசுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், ராமமூர்த்தி, அசோகன் (தனிப்பிரிவு), போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் மணி, சுந்தரமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story