குளத்தில் மூழ்கி மாணவன் பலி


குளத்தில் மூழ்கி மாணவன் பலி
x
தினத்தந்தி 21 Sep 2018 9:45 PM GMT (Updated: 21 Sep 2018 9:37 PM GMT)

தேவாரம் அருகே குளத்தில் குளிக்க சென்ற மாணவன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.

தேவாரம், 


தேவாரம் அடுத்துள்ள பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மரியஆரோக்கியம். கொய்யாப்பழ வியாபாரி. இவரது மகன் முத்துவில்சன்(வயது14). இவன் தே.சிந்தலைசேரியில் உள்ள அமலஅன்னை மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று முகரம் பண்டிகை விடுமுறை என்பதால் முத்துவில்சன் தனது நண்பர்களுடன் சேர்ந்து லட்சுமிநாயக்கன்பட்டி குளத்திற்கு சென்று குளித்தான். 18-ம் கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டதால் குளத்தில் தண்ணீர் நிறைந்து இருந்தது.

முத்துவில்சன் குளத்தின் ஆழமான பகுதியை நோக்கி சென்றான். இதனால் அவன் சிறிதுநேரத்தில் குளத்தில் உள்ள தண்ணீரில் மூழ்கினான்.

இதைத்தொடர்ந்து சக நண்பர்கள் முத்துவில்சன் குளத்தில் மூழ்கியது குறித்து சத்தம் போட்டனர். உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். ஆனால் முத்துவில்சன் மூழ்கியது ஆழமான மற்றும் சகதியான இடம் என்பதால் அவனை மீட்க முடியவில்லை. இதுகுறித்து உடனடியாக உத்தமபாளையம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதையொட்டி நிலையஅலுவலர் சுருளியப்பன் தலைமையில் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் சுமார் 3 மணிநேரம் தண்ணீரில் தேடி முத்துவில்சனை பிணமாக மீட்டனர். இதை பார்த்ததும் அங்கு கூடி இருந்தவர்கள் கதறி அழுதது பெரும் சோகத்தை உண்டாக்கியது. பின்னர் முத்துவில்சனின் உடல் பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து தேவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story