பொய் வழக்குப்பதிவு செய்ததாக குற்றச்சாட்டு: முன்னாள் எம்.எல்.ஏ. சரஸ்வதி கைதுக்கு கண்டனம்


பொய் வழக்குப்பதிவு செய்ததாக குற்றச்சாட்டு: முன்னாள் எம்.எல்.ஏ. சரஸ்வதி கைதுக்கு கண்டனம்
x
தினத்தந்தி 21 Sep 2018 11:15 PM GMT (Updated: 21 Sep 2018 9:47 PM GMT)

முன்னாள் பெண் எம்.எல்.ஏ. சரஸ்வதி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்து இருப்பதாக குற்றம்சாட்டி, கைதுக்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாமக்கல்,

நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று நாமக்கல்லில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் உடையவர் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான காந்திசெல்வன் கலந்து கொண்டு தீர்மானங்களை விளக்கி பேசினார்.

பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு :-

தமிழக அரசை பற்றியும், தமிழக அமைச்சர்களை பற்றியும், நீதிமன்றத்தை பற்றியும், தமிழக காவல்துறை குறித்தும், பலமுறை அவதூறாக பேசிய பா.ஜ.க. பிரமுகர் எச்.ராஜா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் போலீசார் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நாமக்கல்லை சேர்ந்த தி.மு.க பிரமுகர் முன்னாள் எம்.எல்.ஏ. சரஸ்வதி சமூக வலைதளங்களில் தமிழக அமைச்சர் தங்கமணி பற்றி அவதூறாக செய்தி பரப்பியதாக பொய்குற்றம் சுமத்தி, அவர் மீது நாமக்கல் போலீசார் 5 பிரிவுகளில் பொய் வழக்குப்பதிவு செய்து, அவரை உடனடியாக கைது செய்ததற்கு கண்டனம் தெரிவிப்பது, என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.பி.ராமசாமி, பொன்னுசாமி, மாவட்ட துணை செயலாளர்கள் ராமலிங்கம், விமலா சிவக்குமார், பொருளாளர் செல்வம், நகர பொறுப்பாளர் மணிமாறன் மற்றும் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story