ஓட்டல் மீது தாக்குதல்: வாடிக்கையாளர்கள் அலறி அடித்து ஓட்டம்


ஓட்டல் மீது தாக்குதல்: வாடிக்கையாளர்கள் அலறி அடித்து ஓட்டம்
x
தினத்தந்தி 21 Sep 2018 10:31 PM GMT (Updated: 21 Sep 2018 10:31 PM GMT)

அரக்கோணம் புதிய பஸ் நிலையத்தில் ஓட்டல் மீது சிலர் தாக்குதல் நடத்தினார்கள். அப்போது சாப்பிட்டு கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் அலறி அடித்து ஓடினார்கள்.

அரக்கோணம்,


அரக்கோணம், சுப்பராயன் தெருவை சேர்ந்தவர் எம்.ஆனந்தன் (வயது 49), நேருஜி நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (48). இவர்கள் இருவரும் அரக்கோணம் புதிய பஸ் நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான கடையில் ஓட்டல், சுவீட் கடை, டீ ஸ்டால் நடத்தி வந்தனர். நேற்று பகல் 2 மணியளவில் கடைக்குள் புகுந்த சிலர் ஓட்டலில் இருந்த முட்டை தட்டு, குழம்பு வைத்திருந்த பாத்திரம் ஆகியவற்றை கீழே சாய்த்து கொட்டினார்கள். இதில் முட்டை அனைத்தும் உடைந்தது.

அப்போது கடையில் சாப்பிட்டு கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் ஏதோ பிரச்சினை என்று அலறி அடித்து கொண்டு அங்கிருந்து ஓடினார்கள். பின்னர் பரோட்டா போடும் கல்லை அடுப்பில் இருந்து தள்ளி விட்டு கடையில் இருந்த பொருட்களை தூக்கி வீசி விட்டு கடையில் இருந்தவர்களை மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றனர்.

அப்போது வேலை செய்து கொண்டிருந்த பெருமாள்ராஜபேட்டையை சேர்ந்த பஜ்ஜி, போண்டா மாஸ்டர் வெங்கடேசன் (வயது 40) என்பவரின் காலில் பரோட்டா கல் விழுந்தது. அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் வெங்கடேசனை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து ஆனந்தன் அரக்கோணம் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story