நண்பரை கொன்று உடலை குமரியில் வீசிய வழக்கு: தலைமறைவாக இருந்த கேரள வாலிபர் கைது


நண்பரை கொன்று உடலை குமரியில் வீசிய வழக்கு: தலைமறைவாக இருந்த கேரள வாலிபர் கைது
x
தினத்தந்தி 21 Sep 2018 10:36 PM GMT (Updated: 2018-09-22T04:06:21+05:30)

நண்பரை கொன்று உடலை குமரியில் வீசிய வழக்கில் தலைமறைவாக இருந்த கேரள வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

அஞ்சுகிராமம்,

குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பொற்றையடி அருகே குளக்கரையில் கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி வாலிபர் ஒருவர் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இந்த கொலை குறித்து தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி மற்றும் அஞ்சுகிராமம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். கொலை செய்யப்பட்டு கிடந்தவரின் கையில் ஆர்யா என்று பச்சை குத்தப்பட்டு இருந்தது.

அதைக்கண்ட போலீசார் ஆர்யா என்பது கொலையானவரின் காதலியாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. மேலும் இறந்தவர் யார்? என்பதை கண்டறிய போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினார்கள்.

ஆர்யா என்ற பெயர் கேரளாவில் அதிகம் பயன்படுத்தும் பெயர் என்பதால், கொலையானவர் கேரளாவை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அஞ்சுகிராமம் போலீசார், இதுபற்றி கேரள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கேரள போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது, கேரள மாநிலம் வலியத்துறையை சேர்ந்த அனுஅஜூ (வயது 27) என்பவர் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வருவதும், அவருடைய நண்பரான திருவனந்தபுரம் கடினம்குளத்தை சேர்ந்த ஆகாஷ் (22) என்பவர் கடந்த 5 மாதங்களாக காணவில்லை என்பதும் தெரியவந்தது.

மேலும், அவரை அனுஅஜூ, தனது மனைவி ரேஷ்மா (27), தாயார் அல்போன்சா, நண்பர் ஜிதின் ஆகியோருடன் சேர்ந்து துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்று எரித்ததாக திடுக்கிடும் தகவல் வெளியானது. பின்னர் கருகிய உடலை அனுஅஜூ குமரியில் வீசி சென்றார். இதனையடுத்து போலீசார் ரேஷ்மா, அல்போன்சா ஆகிய 2 பேரை கைது செய்தனர். ஏற்கனவே ஜிதின் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான அனுஅஜூ தலைமறைவானார். அவர் எங்கு பதுங்கி இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க மனைவி ரேஷ்மாவிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினார்கள்.

அப்போது தலைமறைவான அனுஅஜூ, கேரளாவில் இருந்து தப்பி தமிழகத்தில் இருப்பதும், ஒரே இடத்தில் தங்காமல் சென்னை உள்பட பல்வேறு இடங்களுக்கு செல்வதும், இறுதியாக அவர் வேளாங்கண்ணியில் பதுங்கி இருப்பதும் தெரிந்தது. அதைத் தொடர்ந்து கேரள தனிப்படை போலீசார் விரைந்து சென்று அனுஅஜூவை கைது செய்தனர். பின்னர், அவரை கேரளாவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story