பாலம் கட்டப்படாததால் ஆற்றில் இறங்கி பிணத்தை எடுத்து செல்லும் அவலம்


பாலம் கட்டப்படாததால் ஆற்றில் இறங்கி பிணத்தை எடுத்து செல்லும் அவலம்
x
தினத்தந்தி 22 Sept 2018 4:19 AM IST (Updated: 22 Sept 2018 4:19 AM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலம் அருகே கொண்டியாற்றின் குறுக்கே பாலம் கட்டப்படாததால் ஆற்றில் இறங்கி பிணத்தை எடுத்து சென்று மக்கள் அடக்கம் செய்து வருகிறார்கள். எனவே பாலம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

நீடாமங்கலம், 

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே மேலப்பூவனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகில் வெள்ளாம்பூவனூர், கீழத்தெரு, தெற்குத்தெரு பகுதிகள் உள்ளது. இந்த பகுதியில் பல்வேறு சமூகங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் யாராவது இறந்தால் பிணத்தை பாடையில் வைத்து சுமந்து அந்த கிராம பகுதியில் உள்ள கொண்டியாற்றில் இறங்கி மயானத்துக்கு எடுத்து சென்று மக்கள் அடக்கம் செய்து வருகிறார்கள். இதனால் பிணத்தை அடக்கம் செய்வதில் பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். இந்த மயானத்துக்கு செல்ல வேறு பாதை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இருப்பினும் அந்த பகுதியில் கோவில் உள்ளதால் பிணத்தை அந்த வழியாக எடுத்து செல்வதில்லை என்றும் கொண்டியாற்றில் இறங்கி பிணத்தை எடுத்து செல்வதாகவும் மக்கள் கூறுகிறார்கள்.

இந்தநிலையில் மேலப்பூவனூரை சேர்ந்த அமிர்தவள்ளி(வயது 65) என்பவர் நேற்று முன்தினம் இறந்தார். அவருடைய இறுதிச்சடங்குகள் நேற்று மாலை நடந்தது. அவரது உடலை பாடையில் வைத்து கொண்டியாற்றில் இறங்கி சுமந்து கரையைக்கடந்து சென்று இறுதிச் சடங்குகளை உறவினர்கள் செய்தனர். கொண்டியாற்றின் குறுக்கே பாலம் கட்டினால் இறந்தவர்கள் உடலை பாலம் வழியாக எடுத்து சென்று அடக்கம் செய்ய வசதியாக இருக்கும். மேலும் பள்ளி கல்லூரி மாணவ- மாணவிகளுக்கும் இந்த பாலம் பயனுள்ளதாக இருக்கும். எனவே கொண்டியாற்றின் குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story