சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஊர்வலம்


சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஊர்வலம்
x
தினத்தந்தி 21 Sep 2018 10:51 PM GMT (Updated: 21 Sep 2018 10:51 PM GMT)

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஊர்வலம் நடைபெற்றது.

நாகப்பட்டினம்,

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நாகையில் மாபெரும் கவன ஈர்ப்பு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்துக்கு மாவட்ட தலைவர் தேன்மொழி தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன் ஊர்வலத்தை தொடங்கி வைத்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

ஊர்வலத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில முடிவின்படி நாகை மாவட்ட மையம் சார்பில் சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக்குழுவில் வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும்போது சமையலர் மற்றும் உதவியாளருக்கு ரூ.3 லட்சமும், அமைப்பாளருக்கு ரூ.5 லட்சமும் உயர்த்தி வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பனஉள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஊர்வலமானது நாகை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடங்கி, பப்ளிக் ஆபீஸ் ரோடு வழியாக அவுரித்திடலில் நிறைவடைந்தது. ஊர்வலம் முடிவில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அந்துவன் சேரல் நிரைவுரையாற்றினார். இதில் சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராஜூ, மாநில செயற்குழு உறுப்பினர் வாசுகி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் காந்தி, ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட அமைப்பாளர் மதிவாணன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் துர்க்காம்பிகா நன்றி கூறினார். ஊர்வலத்தில் 2000-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் பங்கேற்றனர். 

Next Story